இந்திய எல்லையில் அதிகரிக்கும் ட்ரோன் வழி ஊடுருவல்கள்!

இந்திய எல்லையில் அதிகரிக்கும் ட்ரோன் வழி ஊடுருவல்கள்!

கடந்த ஆறு மாதங்களாக இந்திய எல்லையோரம் ஏராளமான ட்ரோன் மூலம் ஆயுதங்கள், வெடிபொருட்கள், போதைப்பொருட்கள் கடத்தப்படுவதும், அதை எல்லை பாதுகாப்பு படையினர் முறியடிப்பது குறித்து செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இந்திய எல்லையை கடந்து ஆட்கள் ஊடுருவது தடுக்கப்பட்டுள்ளதால் ட்ரோன் வழியாக ஊடுருவல்கள் அதிகரித்து வருகின்றன.

பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் இந்திய எல்லைக்கு கடத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை சிறப்பு அதிரடிப் படையினர் பறிமுதல் செய்து வருகிறார்கள். ஆறு மாதங்களுக்கு முன்னர் காஷ்மீர் எல்லையோரப் பகுதியில் ஆயுதங்கள் ட்ரோன் வழியாக கடத்தப்படுவது ஆரம்பமானது.

தற்போது பஞ்சாப் எல்லைப் பகுதியில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ட்ரோன் ஊடுருவல்கள் பற்றிய செய்திகள் வருகின்றன. சென்ற வாரம், பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டம் உதார் தானிவால் சர்வதேச எல்லைப்பகுதியில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்திய வான் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நுழைந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தினார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் ரத்தன் குராட் பகுதியில் சர்வதேச எல்லையை தாண்டி நுழைந்த மற்றொரு பாகிஸ்தான் டிரோனையும் எல்லைப்பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினார்கள். சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோனை ஆய்வு செய்தபோது அதில் போதைப்பொருட்கள் இருப்பது தெரிந்தது. 2 சிறு பாக்கெட்டுகளில் 2.6 கிலோ போதைப் பொருட்கள் மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்தன.

சென்ற மாதம், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தான் ஆளில்லா விமானம் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதே போல் தேரா பாபா நானக் கிராமத்தில் வயலில் அறுவடை செய்யும் போது வந்து விழுந்த ட்ரோன், கிராம மக்களால் மீட்கப்பட்டது. குர்தாஸ்பூர் மாவட்டத்தின் பாரியல் கிராமம் அருகே இன்னொரு ட்ரோனையும் எல்லை பாதுகாப்பு படை வீழ்த்தியது.

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் உள்ள ராம்தாஸ் செக்டாரில் நடத்தப்பட்ட சோதனையில் கடத்தல்காரர் பரம்ஜித் சிங் பம்மாவும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடமிருந்து 8 துப்பாக்கிகள், தோட்டாக்கள், சுமார் 2 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களையும் அதிரடிப்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தானோ கலான் என்னுமிடத்தில் கைப்பற்றப்பட்ட ட்ரோனிலும் 3.3 கிலோ அளவில் போதைப்பொருட்கள் கிடைத்திருக்கின்றன.

காஷ்மீர் எல்லையில் ஊடுருவும் ட்ரோன்களில் ஆயுதங்களும், பஞ்சாப் எல்லையோரம் ஊடுருவம் ட்ரோன்களில் போதைப்பொருட்களும் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. எல்லைப் பகுதிகளில் அதிரடிப்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியாவில் யாருக்கு அனுப்பி

வைக்கப்படுகிறது என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இது போன்ற ட்ரோன் வழி ஊடுருவல்கள் தொடர்ந்து வருவதால் உள்ளூர் வாசிகள் அச்சத்தில் இருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com