கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தமிழகத்தையை உலுக்கிய நிகழ்வாகியுள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஏற்கனவே 50 க்கும் மேற்பட்டவர்கள்கள் உயிரிழந்ததையடுத்து தற்போது பலி எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. இந்த கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து பல கண்டனங்கள் எழுந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் 18-ஆம் தேதி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து சுமார் 150-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களை கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், பாண்டிச்சேரி ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் இதில் சிலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் உயிரிழந்து விட்டனர். சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அந்த வகையில், பலியானவர்கள் எண்ணிக்கை தற்போது வரை 59 ஆக உள்ளது. இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோர்களின் நிலை மோசமாகவே உள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் சிகிச்சையில் இருக்கும் 12 பேர் முழுமையாக கண்பார்வையை இழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 10 லட்சமும், சிகிச்சை பெறும் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரமும் நிவாரணமாக அளிக்கப்படும் என தமிழ்நாடு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கள்ளக்குறிச்சியில் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், மறுபக்கம் இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி தீவிர விசாரணை நடந்தி வருகிறது. அந்த விசாரணையில் பல உண்மைகள் தெரிய வந்துள்ளது.
அதன்படி,
முதலில் இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆனந்தன் நடத்திய வழக்கில், இந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்ட கண்ணுக்குட்டி என்கிற கோவிந்த ராஜ், தாமோதரன், கோவிந்தராஜ் மனைவி விஜயா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதன் பின் இந்த விவகாரம் குறித்து தமிழக காவல்துறையால் சிபிசிஐடிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வந்ததையடுத்து முதல் விசாரணையில் மெத்தனால் கலக்கப்பட்ட விஷ சாராயத்தை குடித்ததால் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என தெரிய வந்தது. அதனை தொடர்ந்து, சட்ட விரோதமாக மெத்தனால் விற்பனை செய்தவர்கள், கள்ளச்சாராயம் உற்பத்தி செய்பவர்கள், அதை விற்பனை செய்பவர்கள் என பலரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்து விசாரணை நடத்தியது. மெத்தனால் விற்பனை செய்த சின்னதுரை உட்பட கிட்டத்தட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் இதில் சம்மந்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.