அதிகரிக்கும் சுயதொழிலாளர்கள்; விவசாயத்துறையை நாடும் பெண்கள் - புள்ளியியல் ஆய்வு மைய ரிப்போர்ட்!

அதிகரிக்கும் சுயதொழிலாளர்கள்; விவசாயத்துறையை நாடும் பெண்கள் - புள்ளியியல் ஆய்வு மைய ரிப்போர்ட்!
Published on

கொரோனா தொற்று பரவலின் போது வேலை இழப்பு, அதற்கு பின்னர் ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் வேலை இழப்பு என்று பொருளாதார சூழல் மந்தகதியில் உள்ள நிலையில் வேலையிழப்பு சம்பந்தமாக தேசிய புள்ளியியல் ஆய்வு மையம் ஒரு ஆய்வை மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.

2021 நிதியாண்டில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி, கொரானா தொற்று பரவலுக்கு பிந்தைய சூழலில் சுய தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது.

39.5 சதவீத ஆண்களும், 39.4 சதவீத பெண்களும் தங்களை சுய தொழிலாளர்களாக குறிப்பிட்டிருக்கிறார்கள். கொரானா முந்தைய ஆண்டில் இதுவே 38.7 சதவீத ஆண்களும், 34.5 சதவீத பெண்களும் சுய தொழில் செய்வதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

கொரானா சூழல்தான், சுய தொழில் செய்யும் முடிவை பெரிய அளவில் பிரபலப்படுத்தியிருக்கிறது. மாத ஊதியம் பெற்றவர்களில் பலர் அப்போது வேலையிழப்பை சந்தித்தார்கள். ஐ.டி துறை தவிர மற்ற துறைகளில் ஆட்குறைப்பு சர்வசாதாரணமாக இருந்தது.

கொரானாவுக்குப் பின்னர் சூழல் சற்று மாறியிருக்கிறது. வேலையிழந்த ஆண்களால் மறுபடியும் வேலை தேட முடிந்திருக்கிறது. ஆனால், இழந்த வேலையை திரும்பப் பெற்ற பெண்கள் குறைவுதான்.

மாத ஊதியம் பெறுபவர்கள் மட்டுமல்ல, சுய தொழில் செய்பவர்கள், கூலி வேலை செய்பவர்கள் என அனைத்து தரப்பினரிலும் இதே டிரெண்ட் தொடர்வதாக தெரிகிறது. ரியல் எஸ்டேட், நிதிக்கணக்குகள், நீதி, நிர்வாகம், சமூக சேவை என பல்வேறு துறைகளில் சுய தொழில் வாய்ப்புகள் 40 சதவீதம் அதிகரித்திருக்கின்றன. ஆனால், பாலின சமத்துவம்? அதில் மாற்றமேயில்லை.

ஆண்களை விட பெண்கள் அதிகமாக வேலைவாய்ப்புகளை பெறும் ஒரே துறை, விவசாயத் துறை. கடந்த மூன்றாண்டுகளில் 11 சதவீத பெண்களுக்கு கூடுதலாக வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. 5 சதவீத ஆண்கள் மட்டுமே விவசாயத்துறையில் புதிய வேலைவாய்ப்புகளை பெற்றிருக்கிறார்கள்.

நர்சிங், லைப்ரரி, பார்மசூட்டிக்கல்ஸ், கால்நடை மருத்துவம், உடற்பயிற்சிக் கல்வி உள்ளிட்ட துறைகளில் அதிக பெண்கள் வேலை வாய்ப்புகளை பெற்று வருகிறார்கள். அதே நேரத்தில் கட்டிடவேலை, ஹோட்டல், சுற்றுலாத்துறை, போக்குவரத்து போன்ற துறைகளில் பெண்களை விட ஆண்டுகளுக்கே அதிக வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.

என்னதான் பாலின சமத்துவம் பற்றியெல்லாம் பேசினாலும், இந்தியாவில் எந்த மாற்றமும் இல்லை. கொரானாவுக்கு முன்னரும் அதற்குப் பின்னரும் எந்தவித வித்தியாசமும் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com