பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு - சட்ட விரோதமாக தமிழகத்திற்கு வரும் பிளாஸ்டிக் பைகள்!

பிளாஸ்டிக் பயன்பாடு  அதிகரிப்பு - சட்ட விரோதமாக தமிழகத்திற்கு வரும் பிளாஸ்டிக் பைகள்!
Published on

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், மாநிலத்தின் பல இடங்களில் உள்ள மளிகைக்கடைகள், பூக்கடைகளில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு தொடர்ந்து இருந்து வருகிறது. சட்ட விரோதமாக குஜராத், பாண்டிச்சேரி போன்ற பகுதிகளிலிருந்து பாலீதீன் பைகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. இவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆளும் அரசு மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதித்து 2019ல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து வாரச்சந்தை, வணிக நிறுவனங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்புகள் பயன்படுத்துவதற்கு தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சுற்றுச்சூழல், நிலத்தடி நீருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை பயன்படுத்தபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அதற்கு பதிலாக மஞ்சள் பை, சணல் பைகளை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், மக்கள் கூடும் இடங்களில் மஞ்சள் பை என்னும் திட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், ஒரு மாதம் மட்டுமே செயல்பாட்டில் இருந்தது. எந்திரம் பழுதாகிவிட்டதால் அதை சரி செய்ய முடியாத நிலை பல இடங்களில் நீடித்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடைகளில் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பிளாஸ்டிக் பயன்பாடு இருந்தால் ஸ்பாட் பைன் விதிக்கப்படுகிறது. ஒரு முறை பயன்படுத்தி விட்டு குப்பையில் வீசி எறியப்படும் பாலிதீன் பைகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கின.

நடைமுறையில் பிளாஸ்டிக் பயன்பாடுகளை குறைப்பது சாத்தியமா என்கிற கேள்வி எழுகிறது. பாலீத்தீன் பைகளின் உற்பத்தி தடுக்கப்படவில்லை. உற்பத்தி அனுமதிக்கப்படும் வரை, அதன் பயன்பாடுகளையும் தடுக்க முடியாது. 100 பாலீதீன் பைகள், 100 ரூபாய்க்கு அனைத்து கடைகளிலும் கிடைக்கிறது. அதாவது, ஒரு பாலீதீன் பை விலை, ஒரு ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கிறது. ஆனால், காகித பையாக இருந்தால் ஐந்து ரூபாய்க்கு குறைவாக கிடைப்பதில்லை.

இன்றைய நிலையில் பாலீதீன் குறைவான விலைக்கு கிடைக்கிறது. நாமக்கல், ஓசூர் போன்ற இடங்களில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்க பாலீதீன் பைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குஜராத், மகராஷ்டிரா போன்ற இடங்களிலிருந்து

பாலீதீன் பைகள் குறைவான விலைக்கும் கிடைத்து வருவதால், யாரும் காகித பையை விரும்புவதில்லை. பிளாஸ்டிக், பாலீதீன் உற்பத்தியை முற்றிலுமாக தடுத்தால் மட்டுமே பயன்பாடுகளை குறைக்க முடியும் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com