ஆள் கடத்தல் மையமாகிறதா இந்தியா! அச்சுறுத்தும் அமெரிக்காவின் அறிக்கை!

ஆள் கடத்தல் மையமாகிறதா இந்தியா! அச்சுறுத்தும் அமெரிக்காவின் அறிக்கை!

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான யூ எஸ் டிபார்ட்மெண்ட் ஆஃப் ஸ்டேட் சமீபத்தில் ‘2022 டிராஃபிக்கிங் இன் பெர்சன்ஸ் (Trafficking in persons) எனும் தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா, ஆள் கடத்தலை ஒழிப்பதற்கான குறைந்த பட்ச முயற்சியைக் கூட செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,

2022 ஆம் ஆண்டில், இந்தியாவின் 36 மாநிலங்கள் மற்றும் அதன் யூனியன் பிரதேசங்களில் கொத்தடிமை தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டு காப்பாற்றப்பட்டதாகவோ அல்லது அது தொடர்புடைய விதிகளின் கீழ் ஏதேனும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவோ எந்த பதிவுகளும் இல்லை. ஆனால், ஆள் கடத்தலில் ஈடுபட்ட கடத்தல்காரர்களுக்கான விடுதலை விகிதம் மட்டும் 89 சதவீதமாக பதிவாகி உள்ளது.

கடத்தல் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அரசு அதிகாரிகளை விசாரித்ததாகவோ, அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டதாகவோ அல்லது அவர்கள் தண்டிக்கப்பட்டதாகவோ தெரிவிக்கக் கூடிய எந்தவிதமான அதிகாரப் பூர்வ சான்றுகளையும் அரசாங்கம் பதிவு செய்து வைத்திருக்கவில்லை என்றும் அந்த அறிக்கை கூறிகிறது.

மேலும் அந்த அறிக்கை, ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான அதன் தேசிய செயல்திட்டத்தை (என்ஏபி) இந்தியா இப்போது வரை புதுப்பிக்கவே இல்லை என்பதோடு பலாத்காரம், மோசடி அல்லது வற்புறுத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை பெற்றுத் தரக்கூடிய வகையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 370வது பிரிவு திருத்தியமைக்கப் பட வேண்டியதன் அவசியத்தையும் இந்திய அரசு கண்டுகொள்ளவில்லை. என்றும் தெரிவிக்கிறது.

பல மாநிலங்களில் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லாத காரணத்தால் கொத்தடிமைத் தொழிலாளர்கள் முறையை நாட்டிலிருந்து இன்னமும் முழுதாக விரட்டியடிக்கப்படாத நிலையே தொடர்ந்து நீடித்து வருகிறது. இன்னமும் அதற்கான தீர்வுகளை முழுமையாகக் காண முடியவில்லை.போதுமான கவனம் பெறப்படாத நிலையில் கொத்தடிமை முறையை ஒழிப்பது என்பது இயலாத காரியம். கிடைத்திருக்கும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டில் 6,622 பேர் கடத்தப்பட்டிருப்பதாகவும் மேலும் 694 பேர் கடத்தப்படுவதற்கான

சாத்தியக்கூறுகள் இருந்ததாகவும் தெரிய வருகிறது. 2019 ஆம் ஆண்டில் 5,145 பேர் கடத்தப்பட்டிருப்பதாகவும், 2,505 பேர் கடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் முழுமையாக இருந்ததாகவும் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் 5,156 கடத்தப்பட்டு அதில் 2,837 பேர் கொத்தடிமைகளாகவும் 1,466 பேர் பாலியல் தொழிலாளர்களாகவும் மாற்றப்பட்டிருப்பதாகத் தகவல். ஆனால், 2020 ஆம் ஆண்டில் கடத்தப்பட்ட 694 பேர் என்னவானார்கள் என்பது குறித்து அரசிடம் போதுமான தகவல் பதிவுகள் எதுவும் இல்லை.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையை மேற்கோள்காட்டும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கை, சுமார் 8 மில்லியன் இந்தியர்கள் கொத்தடிமைகளாக இருப்பதாக மதிப்பிடப்பட்ட போதிலும், இந்திய அமைச்சகம் தனது அறிக்கையில் 1976 வரையிலும் 3,13,962 பேரை மட்டுமே அடையாளம் கண்டு காப்பாற்றியதாகக் கூறியுள்ளது.

“கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உ.பி.யில் 2020ல் அடையாளம் காணப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள், கர்நாடகாவில் இருந்து 1,291 பேர், தமிழ்நாட்டிலிருந்து 289 பேர் மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து 1,026 பேர்” என அந்த அறிக்கை கூறுகிறது.

சில கடத்தல்காரர்கள் ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் இருந்து குழந்தைகளை கடத்திச் செல்கிறார்கள், போதைப்பொருள் மூலம் பெண்களை கவர்ந்திழுக்கிறார்கள், மேலும் 5 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் கடத்தலுக்காக ஹார்மோன் ஊசி போடும்படி கட்டாயப்படுத்துகிறார்கள்.

கடத்தல்காரர்கள் இந்திய மற்றும் நேபாளி பெண்களையும் சிறுமிகளையும் கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி ‘ஆர்கெஸ்ட்ரா டான்ஸர்களாக’ மாற்றுகிறார்கள்.

குறிப்பாக பீகாரில், பெண்கள் கட்டிய கடனைத் திருப்பிச் செலுத்தும் வரை இத்தகைய நடனக் குழுக்களுடன் நடனமாடுகிறார்கள்.

பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதால் இங்கு கொத்தடிமைத் தொழிலுக்காகவும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காகவும் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுமிகள் மிகுதியாகக் கடத்தலுக்கு ஆளாகிறார்கல். கடத்தல்காரர்களுக்கு இவை முக்கிய கேந்திரங்களாக விளங்குகின்றன.

- என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com