
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்தின்படி, வரும் 10ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நான்கு வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர். இந்த திட்டத்தில் முக்கிய பைலட்டாக, இந்திய விமானப்படையில் அனுபவம் வாய்ந்த விமானி மற்றும் ஆராய்ச்சியாளரான சுபான்ஷூ சுக்லா இடம்பெற்றுள்ளார். இவருடன் போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்களும் செல்ல உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் சுபன்ஷூ சுக்லா. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்ட இவர் இதற்காக கடந்த 2019ம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள யூரி காகரின் விண்வெளி மையத்தில் பயிற்சி பெற்றவர் ஆவார். தற்போதைய விண்வெளி பயணத்தில் இவர் விண்வெளியில் விவசாயம், உணவு என பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறார்.
கடந்த 1984-ல் இந்தியாவை சேர்ந்த ராகேஷ் ஷர்மாவிற்குப் பிறகு, தற்போது சுபான்ஷூ சுக்லா விண்வெளிக்குப் பறக்க இருக்கிறார். இதன்மூலம் விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமைகளைப் பெற இருக்கிறார் சுபான்ஷூ சுக்லா.
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் இருந்து வருகிற 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.52 மணிக்கு விண்வெளிக்கு பயணம் செய்ய இருக்கிறார். 28 மணிநேர பயணத்தில் விண்வெளி நிலையத்தை விண்கலம் அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 29-ம்தேதி இந்த பயணம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபன்ஷூ சுக்லா கூறும்போது, "ஆக்ஸியம்-4 விண்வெளிப் பயணத்தின் அனைத்து அம்சங்களையும் அறிந்து கொள்வதில் உற்சாகமாக இருக்கிறேன். விண்வெளி நிலையத்திற்கு 14 நாட்கள் பயணத்தின் வாசலில் நிற்கிறேன். பல்வேறு அமைப்புகள் முதல் கண்டங்கள் மற்றும் கலாசாரங்கள் முழுவதும் மேம்பட்ட தளங்கள் வரை, இந்தப் பயிற்சி தீவிரமானது மற்றும் ஆழ்ந்த பலனளிப்பதாக உள்ளது. விண்வெளியில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் பின்னால் மாதங்கள், ஆண்டுகள் பெற்ற பயிற்சிகள் உதவிகரமாக இருக்கும். இந்த பயணத்தில், வெறும் கருவிகள் மற்றும் உபகரணங்கள் மட்டுமல்ல, கோடிக்கணக்கான இதயங்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளையும் நான் என்னுடன் எடுத்துச்செல்கிறேன்," என்றார்.
அதுமட்டுமின்றி சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள குழுவினர்கள் இந்திய உணவு வகைகளை சுவைப்பதற்காக கேரட் அல்வா, பாசிப்பருப்பு அல்வா மற்றும் மாம்பழ ஜூஸ் போன்ற இனிப்புகளை எடுத்துச்செல்வதாகவும் அவர் கூறினார்.
கடந்த முறை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சென்ற போது, தன்னுடன் மீன் கறி மற்றும் சமோசாக்களை எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.