இந்தியா ஏற்று நடத்திய ஜி 20 மாநாடு வெற்றிகரமாக நிறைவு: அடுத்த மாநாடு எங்கு தெரியுமா?

இந்தியா ஏற்று நடத்திய ஜி 20 மாநாடு வெற்றிகரமாக நிறைவு: அடுத்த மாநாடு எங்கு தெரியுமா?

நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற ஜி 20 உலக நாடுகளுக்கான மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

வளர்ந்து மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா முதல் ஆப்பரிக்க நாடுகள் வரை இடம்பெற்றிருக்கும்.உலகின் அதிகாரம்மிக்க அமைப்புகளில் ஒன்றாக கருதப்படும் ஜி 20 மாநாடு கடந்த 09, 10 ஆகிய தேதிகளில் தலைநகர் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்காக டெல்லி மாநகர் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. பொதுவிடுமுறை அளிக்கப்பட்டு சாலைகளில் தேவையில்லாத மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.

அமைப்பின் தற்போதைய தலைவரான இந்தியா ’வாசுதெய்வக குடும்பகம் - ஒரே பூமி, ஒரே குடும்பம் , ஒரே எதிர்காலம்’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து இந்த மாநாட்டை நடத்தியது. ஜி 20 நேற்று முன்தினம் தொடங்கி வைத்த பிரதமர் மோடி கொரோனா மற்றும் போர்களால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள நம்பிக்கை குறைபாட்டை போக்குமாறு சர்வதேச தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பின்னர் 'ஒரே பூமி' மற்றும் 'ஒரே குடும்பம்' என்ற தலைப்புகளில் நடந்த அமர்வுகளை அவர் தலைமை தாங்கி நடத்தினார். இதைத்தொடர்ந்து மாநாட்டின் கூட்டுப் பிரகடனத்தை அவர் வெளியிட்டார். உக்ரைன் போரால் சர்வதேச நாடுகளிடையே கருத்து வேறுபாடுகள் நிலவியபோதும், அனைத்து உறுப்பு நாடுகளின் ஒப்புதலுடன் கூட்டுப் பிரகடனம் வெளியிடப்பட்டது, பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இரவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கிய விருந்துடன் முதல் நாள் நிகழ்வுகள் நிறைவடைந்தன.இந்த விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மமதா பானர்ஜி உட்பட பல்வேறு மாநில முதலமைச்சர் கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

G20 leaders in Gandhi
G20 leaders in Gandhi

அதனைத் தொடர்ந்து 2-ம் நாளான நேற்றைய நிகழ்வுகளில் முக்கியமானதாக உலக தலைவர்கள் அனைவரும் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் குவிந்தனர். அங்கு அவர்கள் தேசத்தந்தையின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். பின்னர் மாநாட்டு அரங்கிற்கு திரும்பிய அவர்கள், மாநாட்டின் நினைவாக பாரத் மண்டபத்தில் மரக்கன்று நட்டனர். அதைத்தொடர்ந்து 2-ம் நாள் மாநாட்டு நிகழ்வுகள் நடந்தன. இதில் முக்கியமாக 'ஒரே எதிர்காலம்' என்ற தலைப்பில் 3-வது அமர்வு நடந்தது.

இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் உரையாற்றினர். அத்துடன் பல்வேறு அம்சங்கள் குறித்த விவாதங்களும் இருந்தன. இறுதியில் பிரதமர் மோடி நிறைவுரையாற்றினார். அப்போது அவர், மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், மாநாட்டையும் முறைப்படி முடித்து வைத்தார். நவம்பரில் மற்றுமொரு அமர்வு ஜி 20 மாநாட்டு காணொலி காட்சி வாயிலான நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிறைவுரையின்போது பிரதமர் மோடி கூறியதாவது:- ஜி-20 வளர்ச்சிக்காக கடந்த 2 நாட்களில் உங்கள் கருத்துகளை முன்வைத்து, ஆலோசனைகள் வழங்கியதோடு, பல பரிந்துரைகளையும் வைத்திருக்கிறீர்கள். இந்த ஆலோசனைகளை எவ்வாறு துரிதப்படுத்தலாம் என்பதை உன்னிப்பாக ஆராய்வது எங்கள் கடமை ஆகும். ஜி-20 அமைப்பின் மற்றுமொரு அமர்வை நவம்பர் மாதம் இறுதியில் காணொலி மூலம் நடத்த வேண்டும் என நான் பரிந்துரைக்கிறேன்.

இந்த மாநாட்டில் ஒப்புக்கொண்ட விஷயங்களை அதில் நாம் மறுஆய்வு செய்யலாம். அது குறித்த விவரங்களை எங்கள் குழுவினர் உங்களுக்கு அறிவிப்பார்கள். அதில் நீங்கள் அனைவரும் பங்கேற்பீர்கள் என நம்புகிறேன். இத்துடன் இந்த ஜி-20 உச்சி மாநாடு நிறைவுபெறுகிறது என்பதை அறிவிக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். அப்போது உலகம் முழுவதும் நம்பிக்கை மற்றும் அமைதிக்கான பிரார்த்தனையாக சமஸ்கிருத சுலோகம் ஒன்றை அவர் மேற்கோள் காட்டினார்.

இதனைதொடர்ந்து அடுத்த ஜி 20 மாநாட்டை தலைமையேற்று நடத்தும் பிரேசில் நாட்டு அதிபர் லூலா டி சில்வாவிடம், மாநாட்டுக்கான தலைமை பொறுப்பை மோடி ஒப்படைத்தார். ஒப்படைப்பு பின்னர் ஜி-20 அமைப்பின் அடுத்த ஆண்டுக்கான தலைவர் பொறுப்பை பிரேசில் அதிபர் லூயிஸ் லுலா டாசில்வா ஏற்றுக்கொண்டார்.

அப்போது பிரதமர் மோடி கூறுகையில், 'ஜி-20 தலைவர் பதவியை பிரேசிலுக்கு இந்தியா வழங்குகிறது. அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் அவர்கள் இந்த அமைப்பை வழிநடத்துவார்கள். மேலும் உலகளாவிய ஒற்றுமை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவார்கள் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது' என நம்பிக்கை தெரிவித்தார்.

BRAZIL NEXT G20
BRAZIL NEXT G20

பிரதமர் மோடியிடம் இருந்து தலைவர் பொறுப்பை பெற்றுக்கொண்ட பிரேசில் அதிபர் லூயிஸ் லுலா டாசில்வா, 'மோதலுக்குப்பதிலாக அமைதியும், ஒத்துழைப்புமே நமக்கு தேவை' என தெரிவித்தார். பிரிவினையை தூண்டுவதில் ஜி-20 கூட்டமைப்பு ஆர்வம் காட்டவில்லை எனக்கூறிய அவர், ஒன்றுபட்ட நடவடிக்கை மூலம் மட்டுமே சவால்களை எதிர்கொள்ள முடியும் என்றும் உறுதிபட தெரிவித்தார். அதிகாரம் மிக்க இந்த அமைப்பின் தலைவர் பதவியை டிசம்பர் 1-ந்தேதி முதல் பிரேசில் நாடு முறைப்படி அலங்கரிக்கும். அத்துடன் அடுத்த உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் அடுத்த ஆண்டு நவம்பர் இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் டெல்லி ஜி-20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்து உள்ளது. மாநாட்டை வெற்றிகரமாக நடத்திகாட்டியதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட உலக நாட்டு தலைவர்கள் பிரதமர் மோடி பாராட்டி தங்களுடைய எக்ஸ் தளத்தில் கருத்துக்கள் பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com