இந்தியா எந்த ஒரு விஷயத்திலும் தீர்க்கமான முடிவுடுக்கும் நாடாக உள்ளது என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்தார்.
எல்லை பாதுகாப்பு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, மூன்று முறை தலாக் சொல்லும் முறை ஒழிப்பு என அனைத்து விவகாரங்களிலும் நாட்டு மக்கள் நலனை கருத்தில் கொண்டே முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் முர்மு உரையாற்றினார். அவரது உரையின் சுருக்கம்:
கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் முதல் முறையாக இந்திய மக்கள் பல்வேறு நேர்மறையான மாற்றங்களை எதிர்கொண்டுள்ளனர். உலகமே இன்று இந்தியாவின் செயல்பாடுகளை உற்றுநோக்கி வருகிறது.
ஒரு காலத்தில் எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் அதற்கான தீர்வுக்காக இந்தியா வெளிநாடுகளையே சார்ந்திருந்தது. ஆனால், இன்று உலக நாடுகளே வியக்கும் அளவுக்கு இந்தியா செயல்பட்டு வருகிறது.
இன்று இந்தியா நிலையான, பயமில்லாத, முடிவெடுக்கும் ஒரு அரசாக உருவாகியுள்ளது. மக்களின் கனவுகளை நனவாக்கும் அரசாகவும் செயல்பட்டு வருகிறது. மக்கள் பிரச்சனையைத் தீர்க்கும் அரசாகவும் இருந்து வருகிறது.
இந்தியா விடுதலைபெற்ற நூற்றாண்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகாலத்தை அமிர்த காலகட்டம் என்று அரசு கூறிவருகிறது. சுயசார்பு இந்தியாவை கட்டமைக்கும் நேரம் வந்துவிட்டது.
காலத்துக்கு ஏற்றவாறு மாற்றங்களை மேற்க்கொண்டு நவீன உத்திகளுடன் நமது அரசு செயல்பட்டு வருகிறது. அதிரடி தாக்குதல் நடத்தி பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளிவைப்பது, எல்லையை பாதுகாப்பது, அரசியலமைப்புச் சட்டத்தின் 370 வது பிரிவை ரத்துச் செய்வது, மூன்று முறை தலாக் சொல்லும் முறைக்கு விடை கொடுப்பது என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
ஜனநாயகத்திற்கும் சமூகநீதிக்கும் மிகப்பெரிய எதிரி ஊழல்தான். கடந்த காலங்களில் ஊழல் தலைவிரித்து ஆடியது. அதை ஒழிப்பதில் இந்த அரசு முனைப்புடன் செயல்படுவதுடன் உறுதியான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
அதேபோல அடிமைத்தனத்துக்கும் முடிவு கட்டி வருகிறது. இதற்கு உதாரணம். சமீபத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் காலம் காலமாக இருந்துவந்த ராஜபாதையின் பெயர் இப்போது கடமைப்பாதையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முக்கிய பங்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய பெண்கள் ஒருபோதும் பலவீனமானவர்களோ அல்லது மற்றவர்களைவிட மதிப்பு குறைந்தவர்களோ அல்ல. காலங்கள் மாறினாலும் சுதந்திர போராட்டக் காலங்களிலிருந்து அவர்கள் நாட்டிற்காக ஆற்றிய பங்கு மறக்கமுடியாத்து என்றும் குடியரசுத் தலைவர் முர்மு கூறினார்.