ஐக்கிய நாடுகளின் முகவர்கள் மற்றும் பங்குதாரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, 2020ம் ஆண்டில் பிறந்த அனைத்து குறைப்பிரசவங்களில் சரிபாதி இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, சீனா மற்றும் எத்தியோப்பியா ஆகிய ஐந்து நாடுகளில் நடைபெற்றவைதான். உலகம் முழுவதும் குறைப்பிரசவங்களில் பிறந்த குழந்தைகளில் 45 சதவீதத்தை அவர்கள் ஒன்றாகக் கணக்கிட்டனர். இது அதிக இறப்பு அபாயத்தை வெளிப்படுத்துகிறது. மேலும், குழந்தைகளின் உயிர் மற்றும் ஆரோக்கியத்துக்கான, ‘அமைதியான அவசரநிலை‘ என்பதைக் குறிக்கிறது.
2020ல் மொத்தம் 13.4 மில்லியன் குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சுமார் ஒரு மில்லியன் குழந்தைகள் சிக்கல்களால் இறந்துள்ளனர். மேலும், 2020ம் ஆண்டில், பங்களாதேஷில் மிக அதிகமாக குறை பிரசவ விகிதம் இருந்தது. அதைத் தொடர்ந்து மலாவி மற்றும் பாகிஸ்தான் நாடுகள் உள்ளன. இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும், தலா 13 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 30.16 லட்சம் குழந்தைகளுடன் இந்தியா முதலிடத்திலும், அதையடுத்து பாகிஸ்தான் 9.14 லட்சம், நைஜீரியா 7.74 லட்சம், சீனா 7.52 லட்சமாக உள்ளது. புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்புக்கான உள்கட்டமைப்பு மிகவும் விரிவானதாகவும், கடைக்கோடி வரைக்கும் இருக்க வேண்டும் என்பது இந்த ஆய்வின் மூலம் தெளிவாகிறது.
இதுகுறித்து டாக்டர் சுரேந்தர் சிங் பிஷ்ட் கூறுகையில், ‘‘கிராமப்புறங்களில் சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகல் இல்லாதது பற்றிய பொதுவான புகார் உள்ளது. ஆனால், சிறப்புப் பிறந்த குழந்தைகள் பராமரிப்பு பிரிவுகள், மேம்படுத்தப்பட்ட பிரசவ அறைகள் மற்றும் திறமையான பிரசவங்கள் போன்ற முன்முயற்சிகள் பல முன்கூட்டிய குழந்தைகளைக் காப்பாற்ற உதவி இருக்கின்றன. ஆனால், அவை இன்னும் வளரவில்லை. இந்தியாவில் குறை பிரசவங்களின் பிராந்தியவாரியான பிரிவைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி PloS-Global Public Healthல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், மேற்கு வங்கத்தில் 16 சதவிகிதம், தமிழ்நாட்டில் 14 சதவிகிதம் மற்றும் குஜராத்தில் 9 சதவிகிதம் பிறந்ததாகக் கூறி உள்ளது. உலகளாவிய குறைப்பிரசவ விகிதம் 2020ல் 9.9 சதவீதமாக இருந்தது. இது 2010ல் 9.8 சதவீதமாக இருந்தது’ என்று கூறி உள்ளார்.
டாக்டர் சச்சின் ஷா கருத்தின்படி, புதிதாகப் பிறந்த குறை பிரசவ குழந்தைகள் சிறப்புப் பராமரிப்புப் பிரிவுகளில் தரமான பராமரிப்பை ஊக்குவிப்பதும், குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகளைப் பராமரிக்க தாய்மார்களுக்குப் பயிற்சி அளிப்பதும் முக்கியம். இது தாயுடன் நீடித்த பிணைப்பு மற்றும் அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பதைக் குறிக்கிறது.