கொரோனா பரவலுக்கு பிறகு நிகழ்ந்த திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் கிடையாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கமளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்குப் பிறகு மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பு, குறிப்பாக இளைஞர்களின் மரணம் அதிகரித்து வருவதாக விமர்சனம் இருந்து வருகிறது. இதற்கு கொரோனா தடுப்பூசிகளே காரணம் என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், திடீர் மரணங்களுக்கும், கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு கிடையாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கமளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி இளைஞர்களிடையே திடீர் மரணத்தின் அபாயத்தை அதிகரிக்கவில்லை என்றும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு திடீர் மரணங்களுக்கான ஆபத்து குறைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளது. சிகரெட், போதைப் பொருட்கள் மற்றும் மிதமிஞ்சிய மதுப்பழக்கம், குடும்பத்தில் சிறுவயதில் உயிரிழக்கும் மரபணு போன்ற காரணங்களால் தான் திடீர் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
மேலும், மரணம் நிகழ்வதற்கு 48 மணிநேரத்திற்குள் தீவிர உடற்பயிற்சி செய்திருத்தல், அதிக மதுஅருந்தியிருத்தல் ஆகியவையும் திடீர் மரணங்களுக்கு காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் 2021 அக்டோபர் முதல் தேதியில் இருந்து, கடந்த மார்ச் மாதம் வரையில் உயிரிழந்த 729 பேரின் மரணங்களை ஆய்வு செய்ததில் இது தெரியவந்துள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.