
2020-இல் கல்வான் பள்ளத்தாக்கு மோதல்களைத் தொடர்ந்து சீன குடிமக்களுக்கு இந்தியா விசா சேவைகளை நிறுத்தியிருந்த நிலையில், ஜூலை 24, 2025 முதல் மீண்டும் சுற்றுலா விசாக்களை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றமான உறவுகளில் படிப்படியான தளர்வையும், இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான முயற்சிகளையும் குறிக்கிறது.
இந்தியத் தூதரகம், சீனாவின் வெய்போ சமூக வலைதளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டு, விசா விண்ணப்ப செயல்முறையை விளக்கியது.“ஜூலை 24, 2025 முதல், சீன குடிமக்கள் இந்தியாவிற்கு சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். முதலில் ஆன்லைனில் விசா விண்ணப்ப படிவத்தை நிரப்பி, அதை அச்சிட்டு, இணையதள இணைப்பு மூலம் சந்திப்பு நேரத்தை முன்பதிவு செய்ய வேண்டும். பின்னர், கடவுச்சீட்டு, விசா விண்ணப்ப படிவம் மற்றும் பிற தேவையான ஆவணங்களுடன் இந்திய விசா விண்ணப்ப மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்,” என்று தூதரகம் தெரிவித்தது.
2020-இல் இமயமலை எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் உச்சத்தை அடைந்தது. இதையடுத்து, இந்தியா சீன முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்தது, நூற்றுக்கணக்கான சீன ஆப்களை தடை செய்தது மற்றும் பயணிகள் விமான பாதைகளை மூடியது. 2020-இல் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக அனைத்து சுற்றுலா விசாக்களையும் இந்தியா நிறுத்தியது. 2022 ஏப்ரலில், சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (IATA), சீன குடிமக்களுக்கான அனைத்து சுற்றுலா விசாக்களும் செல்லாது என்று அறிவித்தது. இது, தொற்றுநோய்க்குப் பின் 22,000 இந்திய மாணவர்களை சீனா மீண்டும் நுழைய அனுமதிக்காததற்கு பதிலடியாக எடுக்கப்பட்ட முடிவாகும்.
சீனாவின் குளோபல் டைம்ஸ் X தளத்தில் இந்த செய்தியைப் பகிர்ந்து, சீன குடிமக்கள் ஆன்லைன் விண்ணப்பம், சந்திப்பு முன்பதிவு மற்றும் பீஜிங், ஷாங்காய், குவாங்ஷோவில் உள்ள இந்திய விசா மையங்களில் ஆவணங்களை சமர்ப்பித்து விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தது. 2020-க்குப் பின் முதல் முறையாக இந்தியா சீனர்களுக்கு சுற்றுலா விசாக்களை மீண்டும் வழங்குவதாக அது குறிப்பிட்டது.
இந்த ஆண்டு ஜனவரியில், வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி சீனாவிற்கு விஜயம் செய்தபோது, பீஜிங்-புதுடெல்லி இடையே நேரடி வணிக விமானங்களை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. மேலும், இந்திய யாத்ரீகர்களுக்கு மேற்கு திபெத்தில் உள்ள கைலாஷ் மலை மற்றும் மானசரோவர் ஏரி யாத்திரையை மீண்டும் தொடங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவு, இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை இயல்பாக்குவதற்கு ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது.