9 மாதங்கள் விண்வெளியிலிருந்து பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் இந்தியாவின் அழகைப் பற்றி கூறியிருக்கிறார்.
எலோன் மஸ்க்கிற்கு போட்டியாக வந்த போயின் நிறுவனம், மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப 'ஸ்டார்லைனர்' எனும் விண்கலத்தை தயார் செய்திருந்தது. அதில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த புட்ச் வில்மோர் ஆகியோர் பூமியிலிருந்து 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றிருந்தனர்.
அங்கு ஆய்வை முடித்த பிறகு 10 நாட்களில் திரும்ப வேண்டும் என்பதுதான் ப்ளான். ஆனால், சென்ற ஆண்டு ஜூன் மாதம் சென்றவர்கள் 9 மாதங்கள் வரை திரும்பவில்லை. ராக்கெட்டில் மிகப்பெரிய பிரச்சனைகள் இருப்பது தெரியவந்தது. அந்த பிரச்சனையை சரி செய்ய இருவரும் முயற்சி செய்தனர். ஆனால், வெகுகாலமாக முடியவில்லை. ஆட்கள் இல்லாமல் வெறும் ஸ்டார்லைனர் மட்டும் பூமிக்கு திரும்பியது. இதனால் இரண்டு விண்வெளி வீரர்களும் விண்வெளியிலேயே சிக்கிக்கொண்டனர்.
அங்கு இருந்துக்கொண்டு சுனிதா வில்லியம்ஸ் ஒரு சாதனை கூட செய்தார்.
ரேடியோ தொலைத்தொடர்பு சீரமைப்பு பணிகளுக்காக விண்வெளியில் ஸ்பேஸ்வாக் மேற்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் சுமார் 5 மணி நேரம் 26 நிமிடங்கள் விண்வெளியில் மிதந்துள்ளார். இதுவரை 9 முறை ஸ்பேஸ் வாக் செய்துள்ள சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் 62 மணி நேரம் 6 நிமிடங்கள் ஸ்பேஸ்வாக் செய்துள்ளார்.
இப்படியான நிலையில் கடந்த மார்ச் 8ம் தேதி பூமிக்குத் திரும்பினர். இதனைத் தொடர்ந்து பூமிக்கு திரும்பிய அவர்களுக்கு கடந்த 10 நாட்களாக சிகிச்சை நடைபெற்று வந்ததால் ஓய்வில் இருந்தனர்.
நேற்று விண்வெளியில் இருந்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து சுனிதா பேசியிருந்தார். அதாவது, “இந்தியா விண்வெளியில் இருந்து பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் இமயமலைக்கு மேல் நாங்கள் வரும்போது எல்லாம் புட்ச் வில்மோர் அருமையான புகைப்படங்களை எடுத்துள்ளார். கிழக்கிலிருந்து மும்பை, குஜராத் ஆகிய பகுதிகளின் மேற்பரப்புகளில் செல்லும்போது அழகிய கடற்கரைகளை பார்த்தோம். இரவு நேரங்களில் இந்தியாவின் பெரிய நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை அனைத்தும் ஒளிந்தபடியே இருக்கும்.” என தெரிவித்தார்.