இந்தியாவுக்கு எதிரான ட்ரம்பின் மிரட்டல் சட்டவிரோதம்: ரஷ்யா கண்டனம்

“பிற நாடுகளை ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதை நிறுத்தும்படி கட்டாயப்படுத்துவது சட்டவிரோதமானது.
putin with modi
ரஷ்ய அதிபருடன் மோடி Reuters
Published on

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மிரட்டல்களுக்கு ரஷ்யா கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

நாடுகளை வர்த்தகக் கூட்டாளர்களைத் தேர்ந்தெடுக்கும்படி கட்டாயப்படுத்துவது சட்டவிரோதமானது என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடர்ந்து செய்தால் இந்தியாவுக்கு புதிய வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் மிரட்டிய ஒரு நாள் கழித்து, செவ்வாய்க்கிழமை கிரெம்ளின் இந்த அறிக்கையை வெளியிட்டது.

செய்தியாளர்களிடம் பேசிய பெஸ்கோவ், “பிற நாடுகளை ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதை நிறுத்தும்படி கட்டாயப்படுத்துவது சட்டவிரோதமானது. இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு தங்கள் வர்த்தகக் கூட்டாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது” என்று தெரிவித்தார்.

இத்தகைய அழுத்தங்கள் ரஷ்யாவின் வர்த்தகக் கூட்டாளர்களுக்கு எதிரான “மிரட்டல்கள்” என்று கருதப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

“மிரட்டல்களாகவும், ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகளைத் துண்டிக்க நாடுகளைக் கட்டாயப்படுத்தும் முயற்சிகளாகவும் பல அறிக்கைகளை நாங்கள் கேட்கிறோம். இத்தகைய அறிக்கைகள் சட்டபூர்வமானவை என்று நாங்கள் கருதவில்லை” என்று அவர் மேலும் விளக்கினார்.

ட்ரம்ப்பின் மிரட்டல் என்ன?

உக்ரைனில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சித்து வரும் நிலையில், திங்கட்கிழமை இரவு இந்தியாவுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கையை விடுத்தார்.

அதில், ரஷ்ய எண்ணெய் மற்றும் ராணுவப் பொருட்களை இந்தியா வாங்குவதை நிறுத்தவில்லை என்றால், புதிய வரி விதிக்கப்படும் என கூறியிருந்தார்.

“இந்தியா அதிக அளவில் ரஷ்ய எண்ணெயை வாங்குவதோடு மட்டுமல்லாமல், வாங்கிய எண்ணெயில் பெரும் பகுதியை அதிக லாபத்திற்கு சர்வதேச சந்தையில் விற்கிறது.

உக்ரைனில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

இதனால், இந்தியா அமெரிக்காவிற்கு செலுத்தும் வரியை கணிசமாக உயர்த்துவேன்” என்று ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் எழுதியிருந்தார்.

ஏற்கனவே, ஆகஸ்ட் 1 முதல் இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 25% வரி விதித்தது.

ட்ரம்ப்பின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரி “உலகிலேயே அதிகமானது” என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தியாவின் பதில்

ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையான அறிக்கையை வெளியிட்டது.

“இந்தியாவை மட்டும் குறிவைப்பது நியாயமற்றது மற்றும் பகுத்தறிவற்றது. எந்தவொரு பெரிய பொருளாதாரத்தையும் போலவே, இந்தியாவும் தனது தேசிய நலன்களையும் பொருளாதாரப் பாதுகாப்பையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்:
அமெரிக்காவில் குடியுரிமை சர்ச்சை: ட்ரம்புக்கு மற்றொரு பின்னடைவு..!
putin with modi

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதைச் சுட்டிக்காட்டி, இந்தியாவுக்கு எதிராக இரட்டை நிலைப்பாடு எடுக்கப்படுவதாகவும் இந்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com