2024ல் இந்தியா 6.7 சதவீத வளர்ச்சியை எட்டும் - ஐ.நா அமைப்புகளின் கணிப்பு!

2024ல் இந்தியா 6.7 சதவீத வளர்ச்சியை எட்டும் - ஐ.நா அமைப்புகளின் கணிப்பு!
Published on

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் என்று ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான அமைப்பு கணித்திருக்கிறது. நடப்பாண்டில் இந்தியாவில் தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும் என்றும், அதிக வட்டி விகிதம், ஏற்றுமதி போன்றவை வளர்ச்சிப் பாதையில் இந்தியாவை தொடர்ந்து வைத்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளில் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான UNDESA அமைப்பு, நடப்பாண்டில் 5.8 சதவீத வளர்ச்சி இருக்கும் என்றும் அடுத்த ஆண்டில் 6.7 சதவீத வளர்ச்சி இருக்கும் என்றும் கணித்திருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் வளர்ச்சி சீராக இருப்பதாகவும், எதிர்பார்த்தபடி 6.7 சதவீதத்தை எட்ட முடியும் என்றும் தெரிவித்திருக்கிறது.

உலக அளவில் பொருட்களுக்கான தேவைகள் குறைந்துள்ளதால் இந்தியாவின் பொருட்கள் ஏற்றுமதியை பாதித்து வந்தது. இந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ரெடிமேட் ஆடைகள் ஏற்றுமதி, நகை, நவரத்தினங்கள், பருத்தி, கைத்தறி, கைவினைப்பொருட்கள் ஏற்றுமதியைத்தான் பெருமளவு நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில் மென்பொருள் துறையின் சேவைகள் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்து வருகிறது.

கடந்த மூன்று மாதங்களில் ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையே உள்ள வேறுபாடு தொடர்ந்து குறைந்து வருவதால் பொருளாதாரம் ஏற்றத்தில் இருப்பதை புரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள், பொருளாதார வல்லுநர்கள். தெற்காசியாவில் பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் முதலீடுகளின் அளவும் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய அளவில் நடைபெற்று வரும் மாற்றங்கள், பருவநிலை மாற்றங்கள், வறட்சி, வெள்ளம் போன்றவற்றால் ஆண்டின் இறுதியில் இந்தியப் பொருளாதாரத்திற்கு பாதிப்பு இருக்கும் என்று நம்பப்படுகிறது. விழாக்காலங்கள் என்பதால் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. நாட்டின் பணவீக்க விகித்தை 5.5 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

நடப்பாண்டின் அரையாண்டு கணிப்புகளில் எந்தவித மாற்றமும் இல்லை. ஜனவரி மாதம் கணித்த விஷயங்களில் எந்தவித மாற்றங்களையும் செய்ய வேண்டியதில்லை என்கிறார்கள். அடுத்து வரப்போகும் ஆறு மாதங்களில் ஏற்படப்போகும் பொருளாதார வளர்ச்சிதான் முக்கியமானது. அதுதான் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போக்குகளை மாற்றியமைக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com