ஒரு கிலோ பிளாஸ்டிக் கொடுத்தால், உணவு இலவசம்! -சத்தீஸ்கரில் அசத்தும் ஓட்டல்!

ஒரு கிலோ பிளாஸ்டிக் கொடுத்தால், உணவு இலவசம்! -சத்தீஸ்கரில் அசத்தும் ஓட்டல்!

– ஜி.எஸ்.எஸ். 

நம் தினசரி வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் கழிவுகள் சேர்ந்து கொண்டே இருக்கின்றன.  காய்கறி கழிவுகள், பிளாஸ்டிக் கவர்கள்.. என்று மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் பல ரகம்! அவற்றை சரிவர நீக்குவது அல்லது மறு சுழற்சி செய்யும் வகையில் கழிவு மேலாண்மை என்பது மிக முக்கியத்துவம் பெறுகிறது. உலகம் முழுவதும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்வதில் முனைப்பாக செயல்படுகிறது.

ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும்படியான பொருட்கள் தயாரிப்பதை ஆதரிக்கக் கூடாது என்ற ஐரோப்பிய யூனியன் முடிவெடுத்து இருக்கிறது.

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஆறு கோடி டன்னுக்கும் அதிகமாக கழிவு உற்பத்தியாகிறது.  இதில் சரிபாதி பல இடங்களில் மாபெரும் குப்பைக் குன்றாகக் காட்சியளிக்கிறது.  கழிவு மேலாண்மையின் மிக முக்கியமான பகுதி மறுசுழற்சி (recycling).

உலகிலேயே இப்படி மறுசுழற்சி செய்வதில் ஜெர்மனி முன்னணியில் இருக்கிறது.  அங்கு உற்பத்தியாகும் கழிவுகளில் சுமார் 56 சதவிகிதம் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது.  ஆஸ்திரியா, தென்கொரியா, வேல்ஸ்,  ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளும் இதில்  முன்னணியில் உள்ளன.

ஸ்வீடன் பிற நாடுகளிடம் அவற்றின் கழிவுகளை தன்னிடம் தருமாறு கேட்டுக் கொள்கிறது!  காரணம் அங்குள்ள மறுசுழற்சிக் கருவிகள் தொடர்ந்து இயங்க அவை தேவைப்படுகின்றன.  ஸ்வீடனைப்  பொருத்தவரை அங்குள்ள வீடுகளில் உருவாகும் கழிவுப் பொருட்களில் மிகப் பெரும்பாலானவை மறுசுழற்சி செய்யப்படுகின்றன.  இதற்காக பிரமாண்டமான 32 மறுசுழற்சிக் கருவிகள் அங்கே இயங்குகின்றன.  இவற்றிலிருந்து பெறப்படும் மின்சாரம் இரண்டரை லட்சம் தனியார் வீடுகளுக்குப் பயன்படுகிறதாம்.  ஸ்வீடனில் குளிர்காலம் மிகக் கடுமையாக இருக்கும்.  அதற்கு இப்படி மறுசுழற்சியால் பெறப்படும் மின்சாரம் பெரிதும் உதவுகிறது.

சிங்கப்பூரில் செமகாவு என்ற தீவில்தான் கழிவுகள் பெரும்பாலும் சேமிக்கப்படுகின்றன.  பொதுவாக கழிவுகள் சேகரிக்கப்படும் இடம் பார்க்கவே அருவருப்பாகவும், மிகவும் நாற்றம் எடுப்பதாகவும் இருக்கும்.  ஆனால் சிங்கப்பூரில் உள்ள மேற்படி தீவில் சதுப்பு நில மரங்கள் வளர்க்கப்படுகின்றன.  பறவைகள் வந்து தங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.  பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது இந்த தீவு.

இந்தோனேசியாவில் உள்ள ஒரு நகரம் மலாங்.  அங்கு மிக அதிகம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே வசிக்கும் அந்த நகரில் மட்டும் தினமும் 55 ஆயிரம் டன் கழிவுகள் உருவாகின்றது.  அந்த மக்களின் சுகாதார நிலை கேள்விக்குரியதாக உள்ளது.  எனவே அங்கு வசிக்கும் டாக்டர் கமாலா என்பவர் ஒரு புதிய திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்.  இதன்படி ப்ளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு வந்து கொடுத்தால் அதற்கு பதிலாக அவர்களுக்கு இலவச மருத்துவ வசதி அளிக்கப்படும்.  இந்தக் கழிவுகளை மறுசுழற்சிக்காக அந்த மருத்துவர் விற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் சட்டீஸ்கரில் உள்ள அம்பிகாபூர் என்ற பகுதியில் வித்தியாசமான ஒரு உணவகம் தொடங்கப்பட்டது.  அந்த நகரின் கமிஷனரான மனோஜ் சிங் என்பவர் இதை அறிமுகப்படுத்தினார்.  தெருவில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து வந்து இங்கு கொடுத்தால் இலவசமாக உணவு வழங்கப்படும்.  ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அளித்தால் சிற்றுண்டி அல்லது முழு சாப்பாடு உண்டு.  லண்டனில் தொடங்கப்பட்ட ரப்பிஷ் உணவகம் என்பது மேற்படி உணவகம் தொடங்க உந்துசக்தியாக இருந்ததாம்.

கொலம்பியா நாட்டின் பல நகராட்சிகளிலும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.  நீங்கள் அந்த நகராட்சிகளிடம் ஒப்படைக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் எண்ணிக்கை மற்றும் எடைக்கு தகுந்தவாறு உங்களுக்கு ஒரு கூப்பன் கிடைக்கும்.  போதிய கூப்பன்களை சேமித்தால் அதைக்கொண்டு சில கடைகளில் நீங்கள் ஷாப்பிங் செய்யலாம்.  சில திரையரங்குகளில்  திரைப்படம் பார்க்கலாம்.  இப்படி சேமிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

கொண்டாட்ட மனநிலைக்குச் செல்ல மனதிலுள்ள கசப்புகளை முறையாக அகற்ற வேண்டும் என்பார்கள்.  அது போலத்தான் கழிவு மேலாண்மையும்.  முதலில் போகி, அடுத்துதான் பொங்கல் அல்லவா?!

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com