100 மணி நேரத்தில் போடப்பட்ட, 100 கிலோமீட்டர் எக்ஸ்பிரஸ் சாலை.

100 மணி நேரத்தில் போடப்பட்ட, 100 கிலோமீட்டர் எக்ஸ்பிரஸ் சாலை.

காசியாபாத் - அலிக்ரா இடையேயான 100 கிலோமீட்டர் எக்ஸ்பிரஸ் சாலையை, 100 மணி நேரத்தில் கட்டமைத்து, மத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உலக சாதனை படைத்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை தேசிய நெடுஞ்சாலைகள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதன் கட்டுமான வேகம் அதிகரித்து வரும் நிலையில், பல முக்கிய நகரங்களை இணைக்கும் சாலைகள் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்பதால், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறை மூலமாக, இந்தியாவில் நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தையே உருவாக்கியுள்ளது. 

தற்போது இவர்களால் உத்தரபிரதேச மாநிலத்தில் காசியாபாத் முதல் அலிக்ரா பகுதி வரை, எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் திட்டமானது செயல்பாட்டில் இருக்கிறது. இந்த பணிகளை L&T மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த கியூப் ஹைவேஸ் நிறுவனங்கள் இணைந்து செய்கின்றனர். இந்த எக்ஸ்பிரஸ் சாலையை 100 மணி நேரத்தில் 100 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைத்து, இதுவரை உலகில் யாரும் செய்யாத சாதனையை இந்தியா படைத்துள்ளது. 

இந்த எக்ஸ்பிரஸ் சாலை 'கோல்ட் சென்ட்ரல் பிளான்ட் ரீ சைக்கிளிங்' தொழில்நுட்பம் மூலம் கட்டமைக்கப் பட்டுள்ளது. இதனால் கார்பன் வெளியேற்றும் அதிகமாக குறையும் என சொல்லப்படுகிறது. இந்த இரு நகரங்களுக்கும் இடையே சுமார் 118 கிலோ மீட்டர் தூரத்தில் சாலை அமைக்கப்பட வேண்டும். இதன் வழித்தடத்தில் நொய்டா, செகந்தராபாத், குருஜா, தாத்ரி, புலந்த்சாகர் ஆகிய பகுதிகளையும் இணைக்கும்படி சாலையானது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் உள்ள தொழிற்சாலைகள், விவசாயங்கள், மற்றும் கல்வி வளர்ச்சிக்காக இந்த சாலை அதிகம் உதவும் என சொல்லப்படுகிறது. 

இந்த சாதனையை செய்து முடிக்க மொத்தம் 80 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றியுள்ளனர். இதில் 200 ரோடு ரோலர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர்களின் உதவி மூலமாகவே சாலைப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை கட்டமைக்கப் படுவதால், இரு நகரங்களுக்கும் இடையேயான பயண நேரம் வெகுவாகக் குறையும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 

இதுவரை ஒரே மூச்சில் 75 கிலோமீட்டர் கான்கிரீட் சாலையை அமைத்ததே தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கின்னஸ் சாதனையாக இருந்தது. இதற்காக ஒட்டுமொத்தமாக 105 மணி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் தற்போது 100 மணி நேரத்தில் 100 கிலோமீட்டர் சாலையை அமைத்து அவர்களின் சாதனையை அவர்களே முறியடித்துள்ளனர்.

எந்த நாடாக இருந்தாலும் அந்நாட்டின் நெடுஞ்சாலை வசதி என்பது மிகவும் முக்கியமானதாகும். நல்ல சாலை வசதி கொண்ட நாடுகள் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சியை சந்திப்பது மட்டுமின்றி, எல்லா விதத்திலும் வளர்ச்சியடையும் என்கின்றனர். வளர்ந்து வரும் நமது இந்தியாவில் இப்படியான நெடுஞ்சாலை துறையின் சாதனை வரவேற்கத்தக்கதுதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com