140 கோடி மக்கள் என்பக்கம்: எதிர்க்கட்சிகளின் அவதூறு பேச்சு என்னை ஒன்றும் செய்துவிடாது மக்களவையில் பிரதமர் மோடி ஆவேசம்!

140 கோடி மக்கள் என்பக்கம்: எதிர்க்கட்சிகளின் அவதூறு பேச்சு என்னை ஒன்றும் செய்துவிடாது மக்களவையில் பிரதமர் மோடி ஆவேசம்!

“கோடிக்கணக்கான மக்கள் என்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் எனக்கு பாதுகாப்பாக உள்ளனர். எதிர்க்கட்சிகளின் அவதூறு பேச்சும், புகார்களும் என்னை ஒன்றும் செய்துவிடாது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

மக்களவையில் புதன்கிழமை குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார்.

நூறாண்டுகளுக்கு ஒரு முறை வரும் தொற்றுக்காலத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் பொருளாதார நிலைமை ஸ்தம்பித்து நின்றபோது இந்தியாவின் ஸ்திரத்தன்மையையும் செயல்பாடுகளையும் கண்டு உலகமே வியந்து பார்த்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஹிண்டர்பர்க் அறிக்கையை சுட்டிக்காட்டி, அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கோரிக்கை விடுத்திருந்தார்.

2014 ஆம் ஆண்டில் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 609-வது இடத்தில் இருந்த அதானி, 2022 இல் இரண்டாவது இடத்துக்கு வந்தது எப்படி? என்று ராகுல் கேள்வி எழுப்பியிருந்தார். அதானியின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடியே காரணம் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதை அடுத்து அதானி நிறுவனப் பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. இதில் முதலீடு செய்திருந்த எல்.ஐ.சி., மற்றும் எஸ்.பி.ஐ. பணம் நஷ்டம் அடைந்ததற்கு யார் காரணம்? இதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் புயலை கிளப்பியதால் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் ஸ்தம்பித்தன.

இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் பேசுகையில் மேலும் கூறியதாவது:

“இந்த அரசு எழை மக்களின் நலனுக்காக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பழங்குடியினர் முன்னேற்றத்தில் இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. கோடிக்கணக்கான மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எதிர்க்கட்சியினரின் அவதூறு பேச்சுகளும், ஆதாரமில்லாத புகார்களும் எங்களை ஒன்றும் செய்துவிடாது.

பத்திரிகைகளில் வரும் செய்திகளையும், தொலைக்காட்சியில் வரும் காட்சிகளையும் பார்த்து மக்கள் எங்களை ஆதரிக்கவில்லை. கடந்த 9 ஆண்டுகாலமாக அர்ப்பணிப்பு உணர்வுடன் நாங்கள் ஆற்றிவரும் மக்கள் சேவையை கருத்தில் கொண்டே அவர்கள் எங்களை ஆதரிக்கிறார்கள்.

2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை பணவீக்கம் அதிகரித்திருந்தது. அந்த பத்தாண்டு காலத்தில் நாட்டில் ஊழல் தலைவிரித்தாடியது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வன்முறையும் பயங்கரவாதமுமே தலைதூக்கி இருந்தது. உலக அரங்கில் இந்தியாவின் நிலை பரிதாபகரமாக இருந்தது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கிடைத்த வாய்ப்புகளை நழுவ விட்டு நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கியது.

நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவர்கள் இப்போது நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில் விரக்தியில் ஏதேதோ பேசுகிறார்கள்.

முன்பு ஆட்சியிலிருந்த பத்தாண்டு காலத்தில் ஊழலில் ஈடுபட்டவர்களை கண்காணித்து வந்த மத்திய புலனாய்வுத்துறை இப்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. வாக்காளர்கள் செய்ய முடியாததை அமலாக்கத்துறை செய்துள்ளது. இதனால் எதிர்க்கட்சியினர் ஒன்றாக இணைந்து எனது அரசுக்கு எதிராக கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தலில் வெல்லமுடியாதவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது குறைகூறினார்கள். நீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காத நிலையில் உச்சநீதிமன்றத்தை விமர்சிக்கின்றனர்.

நாட்டை காக்க ராணுவத்தினர் தீரத்துடன் செயல்பட்டால் அதை மனம்போனபடி விமர்சிக்கின்றனர். ஊழலுக்கு எதிராக புலனாய்வுத்துறை அமைப்புகள் நடவடிக்கை எடுத்தால் அதிகாரிகளை தாக்கிப் பேசுகின்றனர். பொருளாதார முன்னேற்றம் பற்றி பேசினால், ரிசர்வ் வங்கியை விமர்சிக்கின்றனர்.

பொருள்கள் உற்பத்தி கேந்திரமாக இந்தியா உருவாகி வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் வியப்போடு பார்க்கின்றன. ஆனால், இங்குள்ள சிலர் அதை ஏற்க மறுக்கிறார்கள்.

முன்பு நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்தது. இப்போது அரசியல் ஸ்திரத்தன்மை இருப்பதுடன் முடிவெடுக்கும் அரசாகவும் இந்த அரசு உள்ளது 2008 ஆம் ஆண்டில் நடந்த தாக்குதலை நாம் மறக்க முடியாது. அப்போது இருந்த ஆட்சியாளர்கள் பயங்கரவாதத்தை ஒடுக்கும் துணிவில்லாமல் இருந்தனர். இதனால் ஏராளமான உயிர்கள் பலியாயின.

இப்போது இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் செயல்பாடுகள் உலகிற்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் உள்ளது. ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பு ஏற்பது நமக்கு பெருமையாகும். நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை நம் ஒவ்வொருவரிடமும் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு அவர் வழிகாட்டியாக உள்ளார் என்று பிரதமர் மோடி பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com