
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் கணக்கெடுப்பு சமீபத்தில் நடந்திருக்கிறது. 56 அமைச்சகங்களின் கீழ் 32 லட்சம் பேர் பணியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் ஓராண்டுக்குள் மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 12 சதவீதம் உயர இருக்கிறது.
மத்திய அமைச்சகத்தின் அமைச்சக நேர்முக உதவியாளர் முதல் அமைச்சகத்தின் கடைக்கோடி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் வரை பல்வேறு பதவிகளுக்கான காலியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர பணியிடம் காலியானால் அதை நிரப்புவதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பது திடீரென்று முடிவெடுத்த விஷயமல்ல. சென்ற ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 40 லட்சம் பணியிடங்களுக்கு பதிலாக 30 லட்சம் பணியிடங்கள் மட்டுமே இருப்பதாக கண்டறியப்பட்டது.
கடந்த ஆண்டு இது குறித்து பிரதமர் அலுவலகமே ஆய்வு நடத்தியது. ஆய்வின் முடிவில் 10 லட்சம் பேர், மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அடுத்து வரும் ஓராண்டுக்குள் தேர்வு செய்யப்படப்போவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்து வரும் ஓராண்டுக்குள் புதிய பணிகளை நிரப்புவதற்கு மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. கடந்த மூன்றாண்டுகளாக மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருந்த பல்வேறு அமைச்சகங்கள் தற்போது புதிய ஊழியர்களை சேர்க்க முடிவு செய்திருக்கிறார்கள்.
வரவிருக்கும் மாநில தேர்தல்கள், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக புதிதாக ஆட்கள் சேர்ப்பதற்காக நடவடிக்கைகள் ஆரம்பத்திருக்கின்றன என்கிறது டெல்லி வட்டாரம்.
பட்ஜெட்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கான நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம், பஞ்சப்படி, போக்குவரத்து செலவு உள்ளிட்ட தேவைகளுக்காக சென்ற ஆண்டு இரண்டரை லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.
இம்முறை 3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆக மொத்தம் குறைந்தபட்சம் 18 சதவீதம் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதால் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியமும் குறைந்தபட்சம் 15 சதவீதம் உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.