மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி,வீடுகளுக்கு தீவைப்பு!

கோப்பு படம்: மணிப்பூர் வன்முறை
கோப்பு படம்: மணிப்பூர் வன்முறை

ணிப்பூர் மாநிலம் விஷ்ணுபூர் மாவட்டத்தில் புதிதாக ஏற்பட்ட வன்முறைக்கு 3 பேர் பலியானார்கள். உயிரிழந்தவர்கள் அனைவரும் குவாக்டா பகுதியைச் சேர்ந்த மெய்டீஸ் சமூகத்தினர் என்பது தெரியவந்துள்ளது.

மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் மெய்டீஸ் சமூகத்தினர் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், விஷ்ணுபூர் மாவட்டத்தில் வீடுகள் தீவைத்து கொளுத்தப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

மெய்டீஸ் இன மக்கள் வாழும் பகுதிக்குள் சிலர் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டதில் மூவர் பலியானதாக போலீஸார் மேலும் கூறினர். அந்த பகுதியில் மத்திய படை பாதுகாப்பையும் மீறி இந்த சம்பவம் நடந்துள்ளது.

மணிப்பூரின் விஷ்ணுபூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்திய மெய்டீஸ் சமூகத்தினருக்கும் ஆயுதப்படையினருக்கும் நடந்த மோதலில் 17 பேர் காயமடைந்தனர். அது நட்நத இரண்டு நாட்களில் இச்சம்பவம் நடந்துள்ளது.

இதையடுத்து நிர்வாகத்தினர் கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் பகுதியில் தளர்த்தப்பட்ட ஊரடங்கை விலக்கிக் கொண்டுள்ளனர். முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பகலில் மட்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

மாவட்டத்தில் காங்க்வாய் மற்றும் போவ்காக்சாவ் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க ஆயுதப்படை போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.

மாவட்டத்தில் போடப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றிவிட்டு மெய்டீஸ் இன பெண்கள் எல்லை தாண்டி செல்ல முற்பட்டதை அடுத்து பிரச்னை உருவானது. அவர்களை அஸ்ஸாம் ரைஃபிள் போலீஸார் மற்றும் அதிரடிப் படையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போலீஸார் மீது அவர்கள் கற்களை வீசியதை அடுத்து மோதல் உருவானது. கும்பலைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இனமோதல்கள் வெடித்தன. இதையடுத்து நடந்த வன்முறையில் 160-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

கடந்த மே 3 ஆம் தேதி மெய்டீஸ் இன மக்கள் தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து கோரி பேரணி நடத்தினர். இதற்கு குக்கி இனத்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே உருவான மோதல் வன்முறையாக வெடித்தது.

மணிப்பூர் மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் மெய்டீஸ் வகுப்பினர். இவர்கள் இம்பால் பள்ளத்தாக்கில் வசித்து வருகின்றனர். நாகாஸ் மற்றும் குக்கி உள்ளிட்ட வகுப்பைச் சேர்ந்த பழங்குடியினர் 40 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் மலைப்பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com