குனோ தேசியப் பூங்காவில் 40 நாளில்  3-வது சிவங்கி புலி உயிரிழப்பு!

குனோ தேசியப் பூங்காவில் 40 நாளில் 3-வது சிவங்கி புலி உயிரிழப்பு!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் தக்ஷா எனும் பெண்சிவங்கி புலி ஒன்று இறந்துள்ளது, இந்த இறப்புடன் சேர்த்துக் கணக்கிட்டால் கடந்த 40 நாட்களில் குனோ தேசியப்பூங்காவில் இறந்த சிவங்கி புலிகளின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

ஆண் சிவங்கி புலிகளுடனான சண்டையில் காயமடைந்து இறந்த இந்தப் பெண் சிவங்கி புலிக்கு நேற்று காலை முதலே கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், ஆனால் சிகிச்சை பலனின்றி மதியம் அந்தச் சிறுத்தை இறந்துவிட்டதாவும் குனோ தேசியப் பூங்கா நிர்வாகத்தின் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண் சிவங்கி புலிகளுடன் இனச்சேர்க்கையின் போது ஏற்பட்ட காயங்களால் பெண் சிவங்கி புலியான தக்ஷா இறந்துவிட்டதாக முதற்கட்ட அறிக்கைகள் கூறப்பட்டுள்ளது.இந்தியாவில் சிவங்கி புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த மூன்று சிவங்கி புலிகளுமே தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது.

செவ்வாய்கிழமை இறந்த பெண் சிவங்கி புலிக்கு தக்ஷா என்று பெயரிட்டு அதை அக்னி மற்றும் வாயு என்ற இரண்டு ஆண் சிவங்கி புலிகளுடன் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்துக்குப் பக்கத்தில் தங்க வைத்திருந்தனர்.

இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கடந்த ஏப்ரல் 30 அன்று ஒரு கூட்டத்தை நடத்தினர், அங்கு சிவங்கி புலிகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு தக்ஷா மற்றும் இரண்டு ஆண் சிவங்கி புலிகளையும் சந்திக்க அனுமதிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது, ஒரு நாள் கழித்து, அவற்றின் அடைப்புகளுக்கு இடையே உள்ள வாயில் திறக்கப்பட்டது என்று குனோ தேசியப் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த மே 6 ஆம் தேதி ஆண் சிவங்கி புலிகள் பெண் சிவங்கி புலியின் வசிப்பிடத்துக்குள் நுழைந்தன.

"இனச்சேர்க்கையின் போது ஆண் சிவங்கி புலிகள் பெண் சிவங்கி புலியுடன் வன்முறையாக நடந்துகொள்வது இயல்பானது, அந்த நேரத்தில் விலங்குகளின் அருகில் கண்காணிப்பு குழுவினர் தலையிடுவது சாத்தியமில்லை" என்று குனோ தேசியப் பூங்கா வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.

கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவில் முற்றிலுமாக சிவங்கி புலி அழிந்து விட்டன எனக் கருதப்பட்ட நிலையில், இந்தியக் காடுகளில் மீண்டும் சிவங்கி புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு கடந்த ஆண்டு தான் மீண்டும் சிவங்கி புலிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்தியக் காடுகள் நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் சிவங்கி புலிகளைக் கண்டதால் அந்த நிகழ்வானது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சிவங்கி புலிகள் தொடர்பான அனைத்துச்செய்திகளும் கூட தலைப்புச் செய்தியாகி விடும் அளவுக்கு ஆர்வத்தைக் கிளறுபவையாக மாறி விட்டன.

கடந்த மாதம், உதய் என்ற ஆண் சிவங்கி புலி இறந்தது மற்றும் இறப்புக்கான காரணம் இதய செயலிழப்பு என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பிப்ரவரியில் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட 12 சிவங்கி புலிகளில் இதுவும் ஒன்று.

மார்ச் 27 அன்று, நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட விலங்குகளின் முதல் தொகுதியில் இருந்த பெண் சிவங்கி புலி, சிறுநீரகக் கோளாறால் சந்தேகத்திற்கு இடமின்றி இறந்தது. ஐந்து ஆண் சிவங்கி புலிகள் மற்றும் மூன்று பெண் சிவங்கி புலிகளுடன் கூடிய எட்டு பேர் கொண்ட சிவங்கி புலி குழுவில் அதுவும் ஒன்றாக இருந்தது. அவைகள் கடந்த ஆண்டு பலத்த ஆரவாரத்திற்கு மத்தியில் இந்தியாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

இந்த சிவங்கி புலிகள் அனைத்துமே மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப்பூங்காவில் கட்டுப்படுத்தப்பட்ட, தனிமைப்படுத்தப் பட்ட இடத்தில் வைத்து காட்டுக்குள் விடப்பட்டன. அவற்றின் நடமாட்டம் வனத்துறை மற்றும் தேசிய பூங்காவைச் சேர்ந்த அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தொடர் கண்காணிப்பில் நேர்மறைச் செய்தியாகப் பதிவாகி இருப்பது, மார்ச் 29 அன்று, நமீபிய பெண் சிவங்கி புலிகளில் ஒன்று நான்கு குட்டிகளைப் பெற்றெடுத்த செய்தி மட்டுமே!.

இந்தியாவைப் பொருத்தவரை சிவங்கி புலிகள் என்பவை வெறும் காட்டுவிலங்குகள் மாத்திரமே அல்ல. இங்கு புழக்கத்தில் இருக்கும் பல நாட்டுப்புறக் கதைகளின் ஒரு பகுதியாக அவை இருப்பதால்,சிவங்கி புலிகள் இந்தியாவில் பெரும் கலாச்சார மதிப்பீட்டைக் கொண்டுள்ளன. நாட்டின் தேசிய விலங்கான புலிகளுக்கு நிகராக இங்கு சிவங்கி புலிகளை நேசிப்பவர்களும் அனேகம் பேர் இருக்கிறார்கள். ஆனால், 1947 ஆம் ஆண்டில் நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து வேட்டையாடுதல், வாழ்விடங்கள் ஆக்ரமிக்கப் பட்டதால் வனவிலங்குகளின் வாழ்விடங்கள் சுருங்குதல் , இரையின்மை போன்ற காரணங்களால் பெரும்பான்மையாக இந்தியக் காடுகளில் இல்லாதொழிக்கப்பட்ட இனமாகக் கருதப்படும் பாலூட்டி இனங்களில் ஒன்றாகி இருக்கிறது சிவங்கி புலி இனம். அதை மீட்டெடுக்கும் பொருட்டே மத்திய அரசு சிவங்கி புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தை முன்னெடுத்தது.

“முயற்சி மற்றும் பிழை” அடிப்படையில் இதில் மூன்று கெட்ட செய்திகளுக்கு இடையில் ஒரு நல்ல செய்தியாக சிவங்கி புலி குட்டிகளும் நமக்கு கிடைத்திருப்பது சற்று ஆறுதலான செய்தி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com