ஒதிஷா வன விலங்கு சரணாலயத்தில் புலி அடித்து 65 வயதுப் பெண் மரணம்!
ஞாயிற்றுக்கிழமை மாலை ஒதிஷா மாநிலத்தின் நுவாபாடாவின் சுனபேடா வனவிலங்கு சரணாலயத்தில் ராயல் பெங்கால் புலியின் சந்தேகத்திற்கிடமான தாக்குதலில் 65 வயது பெண் ஒருவர் கொல்லப்பட்டார்.
சன்மதி பாரிக் என்ற அந்தப் பெண்ணின் உடல் திங்கள்கிழமை காலை வனத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது. அவர் சுனாபேடா வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள செசோங் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஜல்மடேய் கிராமத்தில் வசித்து வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை, சன்மதி தனது வீட்டின் பின்புறமுள்ள பக்கத்து காட்டில் இருந்து விறகு எடுக்கச் சென்றிருந்தபோது, புதர்களுக்குப் பின்னால் மறைந்திருந்த புலி குதித்து அவரைத் தாக்கியது.
சன்மதியின் அலறல் சத்தம் கேட்டு சக கிராம மக்கள் அவரை காப்பாற்ற முயன்றபோது, புலி அவளை இழுத்துச் சென்று காட்டுக்குள் மறைந்தது.
வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் தாங்கள் அங்கே வருகை தர திங்கள்கிழமை காலை வரை காத்திருக்குமாறு உள்ளூர் மக்களுக்கு அறிவுறுத்தினர்.
தேடுதல் வேட்டையின் முடிவில் புலி தின்றது போக மீதியிருந்த சன்மதியின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. சன்மதியின் உடலின் இடது பாகம் காணவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, விசாரணை நடத்தப்பட்டது.
துணை ரேஞ்ச் அதிகாரி ஷிபா பிரசாத் கமாரி இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், இறந்தவரின் உடலில் உள்ள அடையாளங்கள் மற்றும் காயங்கள் தரும் குறிப்புகளை வைத்துப் பார்த்தால் இது ராயல் பெங்கால் புலியின் தாக்குதலாக இருக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், அது உண்மையா என்பதை நாங்கள் இன்னும் கண்டறியவில்லை. அது எங்கிருந்து வந்தது என்பதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்," என்று அவர் கூறினார்.
உடல் பிரேத பரிசோதனைக்காக நுவாபாடா மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சன்மதியின் அகால மரணத்தை அடுத்து வனத்துறையினர் கிராமத்தில் ஊழியர்களை நியமித்து, கிராம மக்கள் மாலையில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
வனத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் இப்பகுதியில் புலிகள் காணப்படவில்லை என்றாலும், 2020ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் குறைந்தது எட்டு புலிகள் சுனபேடா வனவிலங்கு சரணாலயத்தில் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதை புலிகள் காப்பகமாக அறிவிக்கக் கோரி விண்ணப்பித்திருப்பதாகத் தகவல்.