புதிய நாடாளுமன்ற கட்டம் திறப்பு விழாவையொட்டி அறிமுகமாகிறது 75 ரூபாய் நாணயம்!

புதிய நாடாளுமன்ற கட்டம் திறப்பு விழாவையொட்டி அறிமுகமாகிறது 75 ரூபாய் நாணயம்!

புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை முன்னிட்டு, ரூ. 75 நாணயம் புழக்கத்திற்கு விடப்படுவதாக மத்திய நிதித் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டு திரும்பப் பெறப்பட்டிருப்பதால் இனி புதிய நோட்டு, நாணயங்கள் வெளியிடப்படாது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று நினைத்த நேரத்தில் நிதித்துறையின் அறிவிப்பு ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

புதிதாக அறிமுகமாகும் புதிய 75 ரூபாய் நாணயத்தின் ஒரு புறம் அசோகா சின்னமும், அதன் கீழ் சத்யமேவ ஜெயதே என்னும் வார்த்தை இடம்பெறுகிறது. இடதுபுறத்தில் பாரத் என்னும் வார்த்தை ஹிந்தி தேவனகிரியிலும், வலது புறத்தில் ஆங்கிலத்தில் இந்தியா என்னும் வார்த்தையும் இடம்பெறுகிறது.

அசோக சின்னமும் அதன் கீழ் 75 என்ற எண்ணும் இடம்பெறுகிறது. நாணயத்தின் மறுபக்கத்தில் பாராளுமன்ற கட்டிடத்தின் படம் இடம்பெறுகிறது. சன்சத் சங்குல் என்ற வார்த்தை தேவனகிரியிலும், பாராளுமன்ற வளாகம் என்ற வார்த்தை ஆங்கிலத்திலும் நாணயத்தில் பொறிக்கப்படுகிறது.

வட்ட வடிவத்தில் 44 மில்லிமீட்டர் சுற்றளவு கொண்ட நாணயத்தை சுற்றி 200 வெட்டுகளை கொண்டிருக்கிறது. 35 கிராம் எடையும் அறிமுகமாகியுள்ள புதிய நாணயம் நான்கு லேயர் அலாய் மூலம் உருவாக்கப்படுகிறது. 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் நிக்கல் மற்றும் 5 சதவீதம் துத்துநாகம் கலவையோடு உள்ளது.

நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பிரதமர் மோடி, 75 ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறார். அரசு விழாக்களில் புதிய நாணயங்கள், புதிய ஸ்டாம்ப் வெளியிடும் நடைமுறைகள் தொடர்கின்றன. அதன் தொடர்ச்சியாகவே 75 ரூபாய் நாணயம் பார்க்கப்படுகிறது.

75 ரூபாய் நாணயம், புதிதல்ல. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாயத்துறை 75 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை கௌரவிக்கும் விதமாக ஏற்கனவே 75 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லியில் நடைபெற்ற விழாவில் 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டிருந்தார்.

மூன்று மாதங்களுக்கு முன்னரும் 75 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டிருக்கிறது. என்.சி.சி அமைப்பு 75 ஆண்டுகளை நிறைவு செய்ததை தொடர்ந்து டெல்லியில் கரியப்பா மைதானத்தில் பேரணி நடைபெற்றது. என்.சி.சி அமைப்பு துவக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, 75 ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.

75 ரூபாய் நாணயம் என்பது அரசு விழாக்களின் முக்கியமான நடைமுறையாகிவிட்டது. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முழு வீச்சில் கொண்டு வர வாய்ப்பில்லை. புதிய நாணயங்கள், நோட்டுகள் வாங்குவதில் மக்கள் மத்தியில் ஆர்வமுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com