மும்பை மராத்தானில் புடைவையுடன் பங்கேற்ற 80 வயது பாட்டி!

மும்பை மராத்தானில் புடைவையுடன் பங்கேற்ற 80 வயது பாட்டி!

உடலை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஒவ்வொருவரது வாழ்விலும் இன்றியமையாததாகி விட்டது. உடலை எப்படி தகுதியாக வைத்துக்கொள்வது என்பது பற்றி பல்வேறு வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. நல்ல சுகாதாரத்துடன், நோயில்லாமல் வாழ்வதே மிகச் சிறந்த செல்வமாக பலரும் கருதி வருகின்றனர். உடலை நன்றாக வைத்துக்கொள்ள தினமும் ஓட்டம், நடை பயிற்சி, ஜாக்கிங் என பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்போதெல்லாம் இளைஞர்கள் மட்டுமல்ல, முதியவர்களும் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

சமூக பிரச்னையை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மும்பையில் அடிக்கடி மராத்தான் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில் இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள்.

சமீபத்தில் மும்பையில் 18வது ஆண்டாக டாடா மும்பை மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் 55,000 பேர் கலந்து கொண்டனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், 80 வயதான பாட்டி மராத்தானில் பங்கேற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தனது பாட்டி மராத்தான் ஓடியதை வீடியோவாக எடுத்து அவரின் பேத்தி டிம்பிள் மேத்தா பெர்னாண்டஸ், இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஓடிய பாட்டியின் பெயர் பார்தி. புடைவை அணிந்து, கால்களில் ஸ்னீக்கர்ஸ் ஷு அணிந்து, கையில் மூவர்ணக் கொடியுடன் எந்த பிரச்னையும் இல்லாமல் மிகவும் செளகரியமாக மராத்தான் ஓடியுள்ளார்.
4.2 கி.மீ. தொலைவை 51 நிமிடங்களில் கடந்துள்ளார்.

இந்தப் படத்தை வெளியிட்டுள்ள பேத்தி டிம்பிள், புகைப்படத்தின் அடியில், “மிகுந்த மன உறுதியுடன் என்னுடைய 80 வயது பாட்டி, டாடா மராத்தானில் பங்கேற்றுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

80 வயதான பாட்டி ஒன்றும் திடீரென மராத்தான் போட்டியில் பங்கேற்கவில்லை. இதற்காக அவர் தினமும் பயிற்சி மேற்கொண்டுள்ளார். மேலும் அவர் கலந்துகொண்டுள்ள ஐந்தாவது மராத்தான் போட்டி இதுவாகும். ‘கையில் மூவர்ணக் கொடியை பிடித்துக்கொண்டு மராத்தான் ஓடியது ஏன்?’ என்று அவரிடம் கேட்டபோது, “நான் ஒரு இந்தியன் என்பதில் பெருமைப்படுகிறேன். மேலும், எனது தேசிய அடையாளத்தை வெளிப்படுத்தவே அவ்வாறு சென்றேன். இளைஞர்கள் பெருமளவில் இதுபோன்ற மராத்தான் போட்டிகளில் பங்கேற்க முன்வர வேண்டும். அது அவர்களின் உடல்நலத்துக்கும் நல்லது” என்கிறார் இந்த பாட்டி.

இந்த வீடியோவை பார்த்த பார்வையாளர்கள் பலரும், மன உறுதியுடனும், உடல் தகுதியுடனும், உற்சாகத்துடனும் மராத்தான் ஓடிய பாட்டிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். “80 வயதான பாட்டி மராத்தான் ஓடியதை பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வயது என்பது வெறும் எண்ணிக்கைதான்” என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர் “வாவ்… 80 வயது நம்பிக்கை நட்சத்திரம்” என்று குறிப்பிட்டுப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

டாடா மும்பை மராத்தான் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மராத்தான் ஓட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு மீண்டும் நடைபெற்றுள்ளது. மராத்தான் போட்டியில் பங்கேற்பவர்கள் போட்டிக்கான ஓட்டத் தொலைவை கடக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. மராத்தானில் பங்கேற்பது மனதில் ஒருவிதமான உற்சாகத்தையும், மன வலிமையையும் அதிகப்படுத்தும் என்பதால் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி இதில் பங்கேற்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com