அரசியல்வாதியுடன் சமரசமா? கர்நாடக பெண் ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடையே குடுமிப்பிடி சண்டை!

அரசியல்வாதியுடன் சமரசமா? கர்நாடக பெண் ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடையே குடுமிப்பிடி சண்டை!

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா இருந்தபோது அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறி பரபரப்பான குற்றச்சாட்டை ஏற்படுத்தியவர் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா.

கர்நாடகத்தில் இப்போது ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கும், ஐ.ஏ.எஸ். அதிகாரியான ரோகிணி சிந்தூரிக்கும் இடையே குடுமிப்பிடி சண்டை நடந்து வருகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான ரோகிணி சிந்தூரி, தனது தனிப்பட்ட படங்களை 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்திருப்பதாக அந்த படங்களை வெளியிட்டு ரூபா பரபரப்பான புகார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருப்பவர் ரூபா. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அந்த நேரத்தில் சிறைத்துறை டிஐஜியாக டி ரூபா இருந்தார். அப்போது சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும், இதற்காக ரூ.2 கோடி வரை அப்போதைய சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணாவுக்கு லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த சம்பவம் கர்நாடகா, தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா, தற்போது கர்நாடக மாநில கைவினைப் பொருள்கள் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார். இதேபோல் கர்நாடகாவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி. இவர் தற்போது கர்நாடகா மாநில இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையராக செயல்பட்டு வருகிறார்.

இந்தநிலையில்தான் ஐ.பி.எஸ். அதிகாரி டி ரூபா, ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி இடையே பெரிய சண்டை நடந்து வருகிறது. இது முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வரை வெளியானதால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் முதல் நெட்டிசன்கள் வரை பேசும் பொருளாகிவிட்டது.

கடந்த 2021ல் ரோகிணி சிந்தூரி மைசூர் கலெக்டராக இருந்தார். அந்த சமயத்தில் அவருக்கும் மைசூர் கிருஷ்ணராஜநகரை சேர்ந்த ஜனதாதளம் (எஸ்) எம்எல்ஏ சாரா மகேசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்துவந்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றம் புகார்கள் அள்ளி வீசினர். இந்நிலையில் தற்போது அவர்கள் 2 பேரும் ஒரு உணவகத்தில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படத்தை ரூபா, தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து, ''ஒரு அதிகாரி அரசியல்வாதியை ஏன் சந்திக்கிறார். சமரசம் செய்கிறார்களா?'' என கேள்வி எழுப்பி இருந்தார். இது தான் இரு அதிகாரிகள் இடையேயான பிரச்னை உருவாக காரணமாக அமைந்தது.

மேலும் ரூபா, தனது முகநூல் பக்கத்தில் ரோகிணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். ஊழல், முறைகேடு தொடர்பான புகார்கள் இருந்தும் கூட அவர் மீது ஏன் விசாரணை நடத்தவில்லை என கேள்வி எழுப்பினார். மைசூர் மாநகராட்சி கமிஷனர் ஷில்பா நாக் உட்பட பிற அரசு அதிகாரிகளுடன் ரோகிணிக்கு இருந்த மோதல்கள் பற்றியும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கும் மேலே ரோகிணி சிந்தூரியின் 7 தனிப்பட்ட படங்களை தனது முகநூல் பக்கத்தில் ரூபா பதிவிட்டுள்ளார். அதில், ''இந்த படங்களை 3 ஆண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ரோகிணி சிந்தூரி ஷேர் செய்துள்ளார். மேலும் இது ஐ.ஏ.எஸ். சர்வீஸ் நடத்தை விதிகள் படி குற்றத்துக்குரியது. இதுபற்றி எந்த விசாரணை அமைப்பு வேண்டுமானாலும் விசாரணை நடத்தலாம்'' என தெரிவித்திருந்தார்.

இதனால் ரோகிணி கடும் கோபம் அடைந்துள்ளார். இதுபற்றி அவர் நேற்று பரபரப்பான அறிக்கை வெளியிட்டார். அதில், '' மனநோய்க்கு தீவிர சிகிச்சை தேவைப்படும். பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டால் அது மிகவும் ஆபத்தானது. என்னை பற்றி தனிப்பட்ட முறையில் அவதூறு பரப்பும் வகையில் சில விஷயங்கள் நடக்கின்றன. அதுதான் அவரது செயல்பாடாகவே உள்ளது. இதற்கு முன்பு அவர் பணியாற்றிய இடங்களிலும் அவதூறு பரப்பும் செயலை அவர் செய்துள்ளார். எனவே ரூபா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரூபா கூறுகையில், ''ரோகிணி, எம்எல்ஏ சாரா மகேசை சந்தித்தது தொடர்பான செய்திகளை படித்தேன். இது சமரச சந்திப்பாக இருக்குமோ என்ற யூகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தில் ஏன் சமரசம் செய்ய வேண்டும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ரோகிணி எனக்கு எதிராக வழக்கு தொடரலாம். நான் நீதிமன்றத்தில் என் தரப்பு நியாயத்தை எடுத்து கூறுவேன்'' என தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com