
70களின் அரசியலில் கொடி கட்டி பறந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு சிஷ்யர்கள் நிறைய பேர் இருந்தார்கள். அவர்களின் தலையாய சிஷ்யர் ராஜ் நாரயணன். இந்திரா காந்தியை பிரதமர் பதவியிலிருந்து விலகியதற்கும் நாடு முழுவதும் எமர்ஜென்ஸி அறிமுகப்படுத்தப்பட்டதிற்கும் ராஜ் நாராயணன் காரணமாக இருந்தார்.
ராஜ் நாராயணனின் வழி வந்தவர்கள்தான் ஷரத் யாதவ், முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார். ஜெ.பியின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் பங்கேற்றவர்கள், பின்னாளில் சமூக நீதி அரசியலை கையிலெடுத்துக் கொண்டார்கள். ராம் மனோகர் லோகியாவும், ஜெயப்பிரகாஷ் நாராயணமும் இவர்களின் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளம் இட்டுக்கொடுத்தார்கள்.
லல்லுவும் நிதிஷ்குமாரும் பீகார் மாநில அரசியலில் தீவிரமானார்கள். முலாயம் சிங் யாதவ், உத்தரப் பிரதேச அரசியலுக்கு வந்தார். ஆனால், எந்த மாநில அரசியலுக்குள்ளும் அடங்கிவிடாமல் பீகார், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் என மூன்று மாநிலங்களைத் தாண்டியும் தேசம் முழுவதும் அடையாளத்தை பெற்றவர், ஷரத் யாதவ் மட்டுமே.
1974ல் ஒரு சாதாரண தொண்டராக, காங்கிரஸ் கட்சியை எதிர்த்து இவரது அரசியல் ஆரம்பமானது. பின்னாளில் ஜனதா கட்சியில் இணைந்தார். எமர்ஜென்ஸிக்கு பின்னர் ஜனதா கட்சி துண்டு துண்டாக சிதறியபின்னர் ஜனதா தள கட்சி உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஜனதா தள தலைவராக இருந்த வி.பி.சிங் விலகிக் கொள்ளவே, அந்த இடத்திற்கு ஷரத் யாதவ் வந்து சேர்ந்தார்.
மூன்று மாநிலங்களிலிருந்து 7 முறை மக்களவை உறுப்பினராக தேர்வானவர். மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக மத்தியில் வேறு ஆட்சிகள் அமையும்போதெல்லாம் ஷரத் யாதவ் தவிர்க்க முடியாத தலைவராக இருந்திருக்கிறார். வி.பி.சிங், வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராக இருந்திருக்கிறார்.
சரண் சிங், வி.பி. சிங், தேவ கவுடா, வாஜ்பாய் அரசில் பங்கேற்றதுடன், நரசிம்மராவ், ராஜீவ் காந்தி அரசுக்கும் பல சந்தர்ப்பங்களில் உதவியாக இருந்திருக்கிறார். காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகளில் அல்லாமல், மாநிலக் கட்சித் தலைவராகவும் சுருங்கிவிடாமல் நீண்ட நாட்கள் தேசிய அரசியலில் முக்கியமான தலைவராக இருந்த பெருமை, ஷரத் யாதவுக்கு உண்டு.
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான ஷரத் யாதவ் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார். தனது கடைசி மூச்சு வரை ஜனநாயகம், மதச்சார்பின்மையை முன்வைத்து அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சோஷலிஸ தலைவர் என்று புகழாராம் சூட்டியிருக்கிறார்.