அடங்கமாட்டாங்கப்பா… நியூயார்க் - தில்லி விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்தவர் கைது!

அடங்கமாட்டாங்கப்பா… நியூயார்க் - தில்லி விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்தவர் கைது!

நியூயார்க்கிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஏப். 23) புதுதில்லி வந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் குடிபோதையில் சக பயணிமீது சிறுநீர் கழித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையின் பேரில் சகபயணி மீது சிறுநீர் கழித்த நபர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் மேலும் கூறினர்.

அந்த ஏர்லைன்ஸ் நிறுவனம் சக பயணிகளிடம் இது தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்து சட்ட அமலாக்கப் பிரிவிடம் அளித்த்தை அடுத்து அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

கடந்த இரு மாதங்களில் நியூயார்க்கிலிருந்து புதுதில்லி வந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவர் சக பயணி மீது சிறுநீர் கழித்த இரண்டாவது சம்பவமாகும் இது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூயார்க்கில் உள்ள ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புதுதில்லி இந்திரா காந்தி விமான நிலையம் வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவர் குடிபோதையில் அதே விமானத்தில் பயணம் செய்த சக பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்தாராம். இது தொடர்பாக விசாரணை நடத்திய ஏர்லைன்ஸ் நிறுவனம் அந்த பயணியை புதுதில்லியில் போலீஸாரிடம் ஒப்படைத்தது.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடமிருந்து அறிக்கை பெற்றுக்கொண்ட சிவில் விமான போக்குவரத்து துறை இயக்ககம் சம்பந்தப்பட்ட பயணி மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தது.

விமானப் பயணிகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி நிலைமையை புத்திசாலித்தனமாக கையாண்ட விமானக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விமானத்தில் குடிபோதையில் ஒரு பயணி, சக பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் மிகவும் மோசமானதாகும். இது தொடர்பாக சக பயணிகள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை என்றாலும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் கொடுத்த அறிக்கையின் பேரில் தவறு செய்த அந்த பயணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி போலீஸார் தெரிவித்தனர்.

கடந்த மார்ச் மாதம் 5 ஆம் தேதி இதேபோல குடிபோதையில் ஒரு பயணி, சக பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் நடந்தது. அதற்கும் முன்னதாக நியூயார்க் மற்றும் பாரிஸிலிருந்து புதுதில்லி வந்த ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்தவர்கள் சக பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் இரண்டாவது சம்பவத்தில் பயணி, காலி இருக்கையில் சிறுநீர் கழித்திருந்தது பின்னர் விசாரணையில் தெரியவந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com