இசைக்குயிலுக்கு நினைவிடம்!

மும்பை பரபர!
இசைக்குயிலுக்கு நினைவிடம்!

பிரபல இந்தி பின்னணிப் பாடகி ‘இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மறைந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, அவருடைய மும்பை
Tardeo பகுதியிலுள்ள ‘ஹாஜி அலி செளக் அருகே நினைவிடம் அமைக்க முடிவு செய்து, அதற்காக பூமி பூஜை (7.2.2023) நடந்தது.

இதில் லதா மங்கேஷ்கரின் தங்கை உஷா மங்கேஷ்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடந்தது. மர வடிவில்  கட்டத் திட்டமிடப்பட்டுள்ள நினைவிடத்தை மகாராஷ்டிரா அரசும், மும்பை மாநகராட்சியும் சேர்ந்து 4 மாதங்களில் கட்டி முடிக்குமெனத் தெரிகிறது.

“லதா மங்கேஷ்கர் அழியாப் புகழ் பெற்றவர். அவரது வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளதால், இங்கே நினைவிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், கடலோரச் சாலைக்கு லதா மங்கேஷ்கரின் பெயரை வைக்கத் திட்டமிட்டுள்ளோம். தனித்துவமான கட்டுமானத்தைக் கொண்டு இந்த நினைவிடம் அமைக்கப்படுமென அமைச்சர் பேசுகையில் தெரிவித்தார்.

மிரட்டல் நடிகையின் பரபரப்புப் பதிவுகள்!

பாலிவுட் படங்கள் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து வருபவர் பிரபல நடிகை கங்கனா ரனாவத். விருதுகளை ஏராளமாக வாங்கியபோதிலும், அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். அரசியலிலும் தீவிரமாக இருக்கும் இவர், பாலிவுட் நட்சத்திரங்கள் குறித்துப் பேசி, செய்திகளில் இடம் பிடித்து வருகிறார்.

தற்சமயம், பிரபல நடிகர் ஒருவர், தனது மனைவியை பெரிய நடிகையாக்க, தன்னை வேவு பார்த்து வருகிறார் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

எப்படி? அடுக்குமாடி குடியிருப்பு பால்கனி, மொட்டை மாடியென எங்கு சென்றாலும் ஜும் லென்ஸ் போட்டு வேவு பார்ப்பதாகத்தான் குற்றச்சாட்டு. யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், “womanizer and Casanova Husband” என்று கூறியிருப்பதால், “நடிகர் ரன்பீர் கபூரையும் அவரது மனைவி அலியா பட்டையும்தான் என்று நெட்டிசன்கள் பேசிக்கொள்கின்றனர்.

இது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கங்கனாவிடமிருந்து மீண்டும் ஒரு பதிவு. அதில், “நேற்றிரவு முதல் என்னைச் சுற்றி சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் எதுவுமில்லை. கேமராக்களுடன் அல்லது இல்லாமல் யாரும் என்னைப் பின் தொடரவில்லை. இது என்னைப் பற்றிக் கவலைப்படுபவர்களுக்கான செய்தியாகும்.

வார்த்தைகளால் சொல்வதைப் புரிந்துகொள்ளாதவர் களுக்கு விஷயங்களைப் புரிய வைக்க வேறு வழி தேவைப்படுகிறது. நான் எச்சரிக்கிறேன். மேலும், “சரியாக இருந்து கொள்ளாவிட்டால் உங்கள் வீட்டிற்குள் நுழைந்து தாக்குவேன். பைத்தியமென என்னை அழைப்பவர் களுக்குக் கூட நான் எந்த அளவுக்குச் செல்வேன் என்பது தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இச்செய்தி நெட்டிசன்களுக்கிடையே வைரலாகி வருகிறது.

தற்சமயம் மறைந்த பிரதமர் இந்திராகாந்தியாக ‘எமர்ஜென்ஸி படத்திலும், பைலட்டாக ‘தேஜஸ் படத்திலும், ‘சந்திரமுகி 2 இல் ராகவா லாரன்ஸுடனும் நடித்து வருகிறார் இந்த மிரட்டல் நடிகை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com