இந்து கோயிலில் நிக்காஹ் செய்து கொண்ட முஸ்லீம் தம்பதி! - அட! இது எங்கே?
மத நல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில், இமாச்சல பிரதேச மாநிலத்தின் சிம்லா மாவட்டத்தில் உள்ள ராம்பூரில் ஒரு புதுமையான திருமணம் நடத்தப்பட்டுள்ளது. திருமணம் என்பதை விட நிக்காஹ் என்று தான் சொல்வது தான் சரி. ஆம்.. ராம்பூரில் உள்ள இந்து கோவில் வளாகத்தில் இஸ்லாமிய பொறியாளர் தம்பதிக்கு இஸ்லாமிய முறைப்படி நிக்காஹ் நடந்தது.
விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) நடத்தும் ராம்பூரில் உள்ள தாக்கூர் சத்யநாராயண் கோவில் வளாகத்தில் தான் இந்த திருமணம் நடந்தது. இன்னும் கூடுதலாகச் சொல்வதென்றால் மௌல்வி முன்னிலையில் இந்த நிக்காஹ் வைபவம் நடைபெற்றது. இத்திருமண விழாவில் முஸ்லிம் மற்றும் இந்து சமூகத்தினர் ஒன்று கூடி ஒற்றுமையுடன் கலந்து கொண்டனர்.
இத்திருமணம் குறித்து தாக்கூர் சத்யநாராயண் கபூரியா கோயில் அறக்கட்டளையின் ராம்பூர் பொதுச் செயலாளர் வினய் ஷர்மா கூறுகையில், எங்கள் கோயில் வளாகத்தில் உள்ள தர்மசாலா மண்டபத்தில் முதன்முறையாக இஸ்லாமிய ஜோடி ஒன்று திருமணம் செய்து கொண்டது. கடந்த மார்ச் 3ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அந்த திருமணம் நடைபெற்றது. திருமண மண்டபத்தின் முன்பதிவு "அவர்கள் பின்பற்றிய விதிகளையும் மீறாமல் எங்கள் விதிமுறைகளின்படியும்" அனுமதிக்கப்பட்டது, என்றார். இந்த திருமணத்தைப் பொருத்தவரை இங்கு"எந்த பாகுபாடும் இல்லை, அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள், இது எங்கள் தரப்பிலிருந்து மத நல்லிணக்கத்துக்கானதொரு மென்மையான சைகை" என்று அவர் கூறினார்.
மணமகன் வீட்டார் சம்பாவில் இருந்து வந்தனர், இருவீட்டாருக்குமான திருமண வரவேற்பு கோயில் மண்டபத்தில் நடத்தப்பட்டது, அதில் இமாச்சல பிரதேசத்துக்கே உரித்தான பாரம்பரிய சைவ உணவு பரிமாறப்பட்டது.
இறைச்சி மற்றும் முட்டை பயன்படுத்தப்படாது எனும் நிபந்தனையுடன் “திருமணம் மற்றும் மரணச் சடங்குகள் போன்ற சமூக நிகழ்ச்சிகளுக்காக நாங்கள் கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தை வழங்குகிறோம்” என்றனர் கோயில் நிர்வாகத்தினர். கோயில் நிர்வாகம் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்எஸ்எஸ் மாவட்ட அலுவலகத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது என்று கூறினார்.
இதுகுறித்து மணமகளின் தந்தை மகேந்திர சிங் மாலிக் கூறுகையில், “எல்லா மதங்களையும் மதித்து, எங்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ள இந்த கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் திருமணத்தை நடத்தினோம். இங்கு வைத்து நிக்காஹ் நடத்தியதன் காரணம், மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கத்துடனே’- என்றார்.
மணமகன் குடும்பத்தினருக்கோ அல்லது மௌல்விக்கோ இதில் ஏதேனும் ஆட்சேபணை இருந்ததா? என்று கேட்டபோது, இந்த முடிவில் அவர்கள் தங்களுக்கு மிகவும் ஆதரவாக இருந்ததாக மாலிக் கூறினார். இவரது மகள் நய்மத் மாலிக் எம்.டெக் சிவில் இன்ஜினியர். மணமகனும், சிவில் இன்ஜினியர்.