தில்லி சாகேத் நீதிமன்றத்தில் பெண் மீது துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்!
தில்லி நீதிமன்ற வளாகத்தில் ஒரு பெண் மர்ம நபரால் சுடப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து குண்டுக்காயம் அடைந்த அந்த பெண் போலீசாரால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், இந்த சம்பவத்தில் வழக்குரைஞர் உடையில் இருந்த குற்றவாளி நீதிமன்ற உணவு விடுதியின் இன்னொரு வாசல் வழியாக தப்பிச் சென்றார். அவரைத் தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
பரபரப்பான இந்த சம்பவம் தெற்கு தில்லியில் உள்ள சாகேத் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்றது. பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தகராறு தொடர்பான வழக்கு தொடர்பாக அந்த பெண் நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது அவரை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்த மர்ம நபர், அந்த பெண்ணின் மீது நான்கு முறை துப்பாக்கியால் சுட்டதாகத் தெரியவந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டவர் தொழில் முறையில் ஒரு வழக்குரைஞர் என்றும் ஆனால், தற்போது அவர் பார் கவுன்சிலால் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. நிதி முறைகேடு தொடர்பாக அந்த பெண் மற்றும் ஒரு வழக்குரைஞர் மீது அந்த
நபர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சாகேட் போலீஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது. அதிக வட்டி தருவதாகக் கூறி அந்த பெண், அவரிடமிருந்து ரூ.25 லட்சம் கடன் வாங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
வழக்குரைஞர் உடையில் வந்த அந்த நபர், வெள்ளிக்கிழமை காலை சாகேத் நீதிமன்றம் வந்தார். அப்போது அந்த பெண், தனது வழக்குரைஞருடன் வழக்கு பற்றி பேசிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் அந்த பெண்ணை நோக்கி சுட்டார். பின்னர் உணவு விடுதியின் சமையலறை வாயில் வழியாக தப்பிச் சென்றார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
தென்மேற்கு தில்லியில் துவாரகையில், பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் வழக்குரைஞர் ஒருவரை அதிரடியாக சுட்டுக் கொன்ற சில நாட்களில் இந்த துணிகர சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்திய நபர்கள் வழக்குரைஞர்கள் என கூறிக்கொண்டு நீதிமன்றத்துக்குள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவத்தை அடுத்து தில்லியில் சட்டத்துறை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பாதுகாப்பு தொடர்பாக தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தில்லியில் வழக்குரைஞர்களுக்கு எதிராக கிரிமினல்கள் நடத்தி வரும் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
தேசியத் தலைநகரான தில்லியில், நீதிமன்ற வளாகத்தில் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்த்து.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி, துப்பாக்கி ஏந்திய இருவர் வழக்குரைஞர்கள் உடையில் ரோகிணி நீதிமன்ற வளாகத்தினுள் நுழைந்து ஜீதேந்தர் மான் என்கிற கோகி தாதா கோஷ்டியினரை நோக்கி துப்பாக்கியால் பலமுறை சுட்டனர். இதைத் தொடர்ந்து போலீஸாரும் பதிலுக்கு சுட்டத்தில் அந்த இரு கிரிமினல்களும் அதே இடத்தில் உயிரிழந்தனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில்கூட ரோகிணி நீதிமன்றத்தில் இரண்டு வழக்குரைஞர்கள் மற்றும் அவர்களது வாடிக்கையாளர்கள் இடையே துப்பாக்கி மோதல் நடந்த்து குறிப்பிடத்தக்கது.