ஆம் ஆத்மி – பா.ஜ.க கைகலப்பு - தில்லி மேயர் தேர்தல் ரத்து!

ஆம் ஆத்மி – பா.ஜ.க கைகலப்பு - தில்லி மேயர் தேர்தல் ரத்து!

தில்லியில் ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க. கட்சியினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதால் தில்லி மேயர் தேர்தல் நடைபெறாமலே கூட்டம் முடிந்தது.

தில்லி மாநகராட்சித் தேர்தல் முடிவுகள் கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. மொத்தம் உள்ள 250 இடங்களில் ஆம் ஆத்மி 134 இடங்களிலும், பா.ஜ.க. 104 இடங்களிலும் வெற்றிபெற்றது. காங்கிரசுக்கு வெறும் 9 இடங்கள் மட்டுமே கிடைத்தன. சுயேச்சைகள் மூன்று இடங்களில் வெற்றிபெற்றனர்.

தில்லி மாநாகராட்சி ஜனவரி 6 இல் கூடுகிறது. அப்போது தேர்வு செய்யப்பட்ட 250 கவுன்சிலர்களும் பதவியேற்பார்கள். மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று முன்னரே அறிவிக்கப்பட்டது.

ஐந்து வருடங்கள் கொண்ட மேயர் பதவிக்கு முதல் வருடம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தில்லி மாநாகராட்சி மேயர் பதவிக்கு கிழக்கு படேல் நகர் வார்டு பெண் உறுப்பினர் ஷெல்லி ஓபராயும், துணை மேயர் பதவிக்கு சாந்தினி மஹால் வார்டு உறுப்பினர் ஆலி முகமது இக்பாலும் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடுவார்கள் என ஆம் ஆத்மி சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே தில்லி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மாநகராட்சி கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பதற்காக வந்திருந்தனர்.

இந்த சூழலில் தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்ஸேனாவால் நியமிக்கப்பட்ட தாற்காலிக சபாநாயகர் சத்ய சர்மா, முதலில் நியமன உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க முற்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கைக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினர்களுக்கு முதலிலும் நியமன உறுப்பினர்களுக்கு கடைசியிலும் தான் பதவிப் பிரமாணம் செய்துவைக்க வேண்டும் என்றும் கோரினர்.

முன்னதாக தில்லி அரசை கலந்து ஆலோசிக்காமல் துணைநிலை ஆளுநர், தில்லி மாநாகராட்சிக்கு நியமன உறுப்பினர்கள் பெயரை அறிவித்ததற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் மாநகராட்சித் தேர்தலில் தோற்று பின்வாங்கிய பா.ஜ.க.வுக்கு ஆதரவாக துணைநிலை ஆளுநர் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டினர்.

அவையில் மூத்த உறுப்பினரான முகேஷ் கோயல் என்பவரைத்தான் தாற்காலிக சபாநாயகராக நியமிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி பரிந்துரைத்திருந்தது. ஆனால், துணைநிலை ஆளுநர் பா.ஜ.க.வைச் சேர்ந்த சர்மாவை நியமித்ததை அடுத்து அவையில் கடும் அமளியும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆம் ஆத்மி, பாஜக. உறுப்பினர்களிடையே முதலில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் வலுக்கவே இருதரப்பினரும் நாற்காலியை எடுத்து வீசினர். பெஞ்சுகளில் ஏறி நின்று கோஷமிட்டனர்.

இந்தச் சூழலில் அவையை நடத்த முடியாத நிலையில் கூட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், மேயர் தேர்தல் பின்னர் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தாற்காலிக சபாநாயகராக மூத்த உறுப்பினர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால், பா.ஜ.க. ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக நடந்துகொண்டது என்று ஆம்.ஆத்மி எம்.எல்.ஏ. செளரவ் கங்குலி டுவிட்டர் மூலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி மேயர் வேட்பாளராக ஷெல்லி ஓபராய் நிறுத்தப்படுவார் என்று முன்னதாகவே தெரிவித்திருந்தது. ஆனால், மேயர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்று கூறிவந்த பா.ஜ.க. கடைசி நேரத்தில் ரேகா குப்தா என்பவரை களத்தில் இறக்கியது.

எல்லாம் சட்டப்படிதான் நடக்கிறது. மேயர் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில்தான் ஆம் ஆத்மி கட்சியினர் ரகளையில் ஈடுபட்டனர் என்று பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

மேயர் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று ஏற்கெனவே காங்கிரஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com