தில்லியில் ஆம் ஆத்மி-பா.ஜ.க. மோதல்-ஆர்ப்பாட்டம்!!

தில்லியில் ஆம் ஆத்மி-பா.ஜ.க. மோதல்-ஆர்ப்பாட்டம்!!

தில்லி மாநாகராட்சி மேயர் தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. மற்றும் ஆம் ஆத்மி கட்சி இடையே நடந்து வரும் மோதல் இன்று தலைநகரில் உள்ள வீதிகளிலும் எதிரொலித்தது.

தில்லி மாநரகராட்சிக்கான 250 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 152 இடங்களை பெற்று 15 ஆண்டுகளுக்கு பின் மாநகராட்சியை பா.ஜ.க.விடமிருந்து கைப்பற்றியது. தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.க.வுக்கு 104 வார்டுகளே கிடைத்தன. காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் மட்டுமே வென்றது.

இந்த நிலையில் மேயர், துணை மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

மேயர் பதவிக்கு ஷெல்லி ஓபராய் மற்றும் அஷு தாகுர் ஆகியோரை வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது. மேயர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று கூறிவந்த பா.ஜ.க. கடைசி நேரத்தில் ரேகா குப்தாவை மேயர் வேட்பாளராக அறிவித்தது.

பா.ஜ.க. எம்.பி.க்கள் 7 பேரும், ஆம் ஆத்மி கட்சியின் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் அறிவிக்கும் 14 எம்.எல்.ஏ.க்கள் மேயர் தேர்தலில் பங்கேற்க முடியும்.

இந்த நிலையில் ஜனவரி 6 ஆம் தேதி மாநகராட்சி மன்ற கூட்டத்தில் துணைநிலை ஆளுநரால் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு முதலில் பதவிப் பிரமாணம் செய்துவைக்க தாற்காலிக சபாநாயகர் முயன்றபோது அதற்கு ஆம் ஆத்மி உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

நியமன உறுப்பினர்களை அறிவிக்கும் முன்பு துணை நிலை ஆளுநர் இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கலந்து ஆலோசிக்கவில்லை என்று ஆம் ஆத்மி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.

மேலும் முதலில் தேர்ந்தெடுக்கப்ட்ட உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்த பின்னர்தான் நியமன உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்விக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதற்கு பா.ஜ.க. உறுப்பினர்கள் துணைநிலை ஆளுநருக்கு அதற்கு உரிமை உண்டு என்று வாதிட்டனர். இதனால், அவையில் பா.ஜ.க. உறுப்பினர்கள், ஆம் ஆத்மி உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு கட்சியினரும் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மேயரை தேர்ந்தெடுக்காமலேயே கூட்டம் முடிந்தது.

இதனிடையே பா.ஜக.வினரும், ஆம் ஆத்மி கட்சியினரும் தில்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆம் ஆத்மி கட்சியினர் தில்லி பா.ஜ.க. தலைமை அலுவகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தில்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த, ஆம் ஆத்மி தலைமை செய்தித் தொடர்பாளர் செளரவ் பரத்வாஜ், கட்சித் தலைவர் அதில் அகமது கான் ஆகியோர் போராட்டத்துக்கு தலைமை வகித்தனர்.

தில்லி மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்களை வாக்களிக்கச் செய்யும் நோக்கிலேயே பாஜக அவர்களுக்கு முதலில் பதவிப் பிரமாணம் செய்துவைக்க முயன்றது. இது திட்டமிட்ட சதியாகும். நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற உறுதியை துணைநிலை ஆளுநர் அளிக்க வேண்டும் அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்று ஆம் ஆத்மி கட்சியின் மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் தெரிவித்தார்.

இதனிடையே பா.ஜ.க. தொண்டர்கள் கட்சிக் கொடி, பதாகைகள் சகிதம் பேரணியாக கெஜ்ரிவால் வீடு முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நியமன உறுப்பினர்கள் பதவி ஏற்கும் போது ஆம் ஆத்மி உறுப்பினர்கள் குண்டர்கள்போல் வந்து அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் தாக்கியதில் எங்களின் கவுன்சிலர்களுக்கு காயம் ஏற்பட்டது. எனவே நடந்த செயலுக்கு ஆம் ஆத்மி கட்சியினர் மன்னிப்பு கோர வேண்டும் என்று பா.ஜ.க.வினர் கோரினார். நிலைமை மோசமாகவே போலீஸார் தண்ணீரை பீய்ச்சி அடித்து அவர்களை விரட்டியடித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com