அதானி குழும முறைகேடு விவகாரம்: ஜே.பி.சி. விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை!

அதானி குழும முறைகேடு விவகாரம்: ஜே.பி.சி. விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை!

அதானி குழுமத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு அல்லது உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

பொதுமக்களின் பணம் தொடர்பான விஷயம் என்பதால் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு அல்லது உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்படுவதுடன், தினசரி அடிப்படையில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடி பேசி, இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்ப முடிவு செய்தனர். இது தொடர்பாக கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸை அளித்தனர். ஆனால், நாடாளுமன்ற அவைத்தலைவர் அவர்களின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. இதனால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதானி குழுமம் தொடர்பான மோசடி அம்பலமானதை அடுத்து அந்த நிறுவனத்தின் பங்குகள் சரிந்தன. இதையடுத்து அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டிருந்த பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டது. கோடிக்கணக்கான இந்தியர்கள் போட்டுவைத்திருந்த பணத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

‘பாரத ஸ்டேட் வங்கியிலும், எல்.ஐ.சி.யிலும் மக்கள் போட்டிருந்த பணம் அதானிக்கு கடனாகக் கொடுக்கப்பட்டது. அதானி நிறுவனத்தின் மோசடி குறித்து வெளியான தகவல்களால் அதன் பங்குகள் திடீரென சரிந்தன. இதனால் அதில் முதலீடு செய்யப்பட்ட பணத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கியிலும் எல்.ஐ.சி.யிலும் தாங்கள் போட்ட பணம் திரும்பி வருமா என சந்தேகத்தில் மக்கள் பீதியுடன் உள்ளனர்’ என்று சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ராம்கோபால் யாதவ் தெரிவித்துள்ளார்.

‘ஒன்பது அரசியல் கட்சிகள் சார்பில் மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸ் தரப்பட்டது. ஆனால், அவைத் தலைவர் அது முறையாக இல்லை என்று கூறி நிராகரித்து விட்டார்’ என பாரத் ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த கேசவராவ் தெரிவித்தார்.

‘இது குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நியாயமானது. எனவே, இதற்கு அனுமதிக்க வேண்டும்’ என்று திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாந்தனு சென் கூறினார்.

‘மாநிலங்களவை விதி 267ன் படி அவை அலுவல்களை ரத்து செய்துவிட்டு உறுப்பினர்கள் கோரிக்கை குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும். மக்கள் பணத்துக்கு அரசுதான் பொறுப்பு. கெளதம் அதானியும் அவரது நிறுவனங்களும் நாட்டை சூறையாடிவிட்டன’ என்று மார்க்சிஸ்ட் தலைவர் இளமாறம் கரீம் கூறினார். ‘இது ஒரு மிகப்பெரிய ஊழல். தீப்பற்றி எரியும் இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்’ எனவும் அவர் கூறினார்.

‘இந்த மெகா ஊழல் குறித்து அரசு மெளனமாக இருப்பது ஏன்?’ என்று ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங் கேள்வி எழுப்பினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com