அதானியின் வளர்ச்சிக்கு மோடியே காரணம்: ராகுல்காந்தி பகிரங்க குற்றச்சாட்டு!

அதானியின் வளர்ச்சிக்கு மோடியே காரணம்: ராகுல்காந்தி பகிரங்க குற்றச்சாட்டு!

2014 ஆம் ஆண்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் 608 வது இடத்தில் இருந்த கெளதம் அதானி, 2023 ஆம் ஆண்டில் இரண்டாவது இடத்துக்கு வந்தது எப்படி என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது பேசிய ராகுல்காந்தி இந்த கேள்வியை எழுப்பினார்.

மோடி அரசின் ஆதரவு இல்லாமல் அதானி இந்த இடத்துக்கு வந்திருக்க முடியாது. இதற்காக பிரதமர் மோடிக்கு தங்கப்பதக்கம் கொடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசுக்கும் – வரத்தகத்துக்கும் உள்ள தொடர்புக்காக இந்தியாவை ஓர் ஆய்வாக உலக நாடுகள் படிக்க வேண்டும். குறிப்பாக ஹார்வர்டு மேலாண்மை பள்ளி இதை படிக்க வேண்டும் என்று கூறிய ராகுல், மோடி மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.

இதனிடையே மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, பிரதமர் மீதான புகாருக்கு ஆதாரங்களை காட்டமுடியுமா என்று ராகுலுக்கு சவால் விட்டார். பா.ஜ.க. உறுப்பினர்கள் ராகுலின் குற்றச்சாட்டுகள் ஒரு கட்டுக்கதை என்று கூறினர்.

விமானநிலையங்கள் பராமரிப்பில் முன் அனுபவம் இல்லாத அதானி குழுமத்துக்கு 6 விமான நிலையங்களை பராமரிக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் ராகுல் குற்றஞ்சாட்டினார்.

அப்போது ராகுல் ஜி, நீங்கள் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் ஜாமீனில் வெளிவந்திருக்கிறீர்கள் என்பது தெரியும் என்று நினைக்கிறேன் என்று முன்னாள் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சுட்டிக்காட்டினார்.

தமது பேச்சின் இறுதியில் ராகுல், பிரதமருக்கு நான்கு கேள்விகள் எழுப்பினார். அதானியுடன் எத்தனை முறை வெளிநாடு சென்றீர்கள்? நீங்கள் வெளிநாடு சென்றபின் உங்களுடன் எத்தனை முறை அதானி இணைந்துகொண்டார்? நீங்கள் சென்றுவந்தபின் எத்தனை நாடுகளுக்கு அதானி சென்று வந்தார்? அதானிக்கு அந்த நாடுகளில் எத்தனை ஒப்பந்தங்கள் கிடைத்தன?

9 ஆண்டுகளில் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 608 வது இடத்திலிருந்து 2-வது இடத்துக்கு வந்துள்ளார். மோடி அரசின் உதவியில்லாமல் இது நடக்க வாய்ப்பு இல்லை என்றும் ராகுல் கூறினார்.

பாரத் ஜடோ யாத்திரையின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் ராகுல் பகிர்ந்து கொண்டார். நான் சென்ற இடங்களில் எல்லாம் இளைஞர்கள் என்னிடம் அதானியின் வளர்ச்சியின் ரகசியம் என்ன? என்று கேட்டனர். அதானி எந்த துறையில் கால்வைத்தாலும் தோல்வியே அடையாமல் வெற்றிபெற்றது எப்படி என்று கேட்டதாகவும் ராகுல் குறிப்பிட்டார்.

துறைமுகம், விமானநிலையம், பாதுகாப்புத்துறை இப்படி எந்த துறையை எடுத்தாலும் அங்கு அதானிக்குத்தான் முக்கிய பங்கு இருக்கிறது. அரசு நிறுவனத்தின் பங்குகள் அதானி நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. எல்.ஐ.சி. நிறுவனம் மட்டும் ரூ.27,000 கோடியை முதலீடு செய்துள்ளது. பிரதமரின் ஆதரவு இல்லாமல் இவை நடக்க வாய்ப்பு இல்லை. அதானியின் போலி நிறுவனங்கள் குறித்து அரசு ஏன் விசாரணை நடத்தவில்லை என்று கேட்டார் ராகுல்.

மோடி வெளிநாடு சென்ற இடங்களில் எல்லாம் அதானிக்கு ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளது. இது இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை போல் தெரியவில்லை. அதானியின் வெளிநாட்டுக் கொள்கை போல் இருக்கிறது.

அக்னிவீர் திட்டம் ராணுவத்தின் திட்டம் அல்ல. அது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திட்டமாகும் என்றார் ராகுல்காந்தி.

இதையடுத்து அவைத்தலைவர் ஓம் பிர்லா, ஒரு குறிப்பிட்ட விஷயத்தையே பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம். மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு ராகுல், நான் உள்ளூர், தேசிய, சர்வதேச பிரச்னைகளைத் தான் பேசிவருகிறேன். இதில் மூன்றிலும் அதானிக்கும், பிரதமருக்கும் தொடர்பு உள்ளது என்று பதில் கூறினார். குஜராத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்ததிலிருந்தே இருவருக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com