46 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வைரலான இந்தியரின் காதல் சாகச பயணம்!
இந்தியாவில் தில்லியில் வசித்து வந்தவர் ஓவியக் கலைஞரான பி.கே.மகாநந்தியா. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பெண் சார்லோட் வோன் ஷெட்வின். மகாநந்தாவின் ஓவியக்கலையை பற்றி தெரியவந்த ஷெட்வின், அவரை நேரில் சந்தித்து அவரிடம் தனது ஓவியத்தை வரைந்து பெற்றுச் செல்ல எண்ணி ஸ்வீடனிலிருந்து 1975 ஆம் ஆண்டில் இந்தியா வந்தார்.
முனைவர் பிரத்யும்ன குமார் மகாநந்தியா அப்போதுதான் தில்லியில் உள்ள ஓவியப் பள்ளியில் படித்து முடித்து கலைஞராக பிரபலமானார்.
இந்த நிலையில் தனது படத்தை ஓவியமாக வரைந்து தருமாறு கேட்டுக் கொண்டார் ஷெட்வின். அவரது ஓவியத்தை வரையும் போது மகாநந்தியாவுடன் அவருக்கு திடீர் காதல் ஏற்பட்டது. மகாநந்தியாவின் அமைதியான சுபாவமும், எளிமையும் ஷெட்வினை கவர்ந்தது. அதேபோல ஷெட்வின் அழகில் சொக்கிப்போனார் மகா நந்திதா.

ஸ்வீடன் நாட்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டிய சூழ்நிலையில் காதலர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இது தொடர்பாக பிபிசி அளித்துள்ள பேட்டியில் மகாநந்தியா கூறுகையில், “என் தந்தையை முதன் முதலாக ஷெட்வின் சந்திக்க வந்தபோது சேலை அணிந்திருந்தார். எனது தந்தயை அவள் எப்படி சமாளித்தாள் என்பது தெரியவில்லை. பின்னர் எனது தந்தை மற்றும் குடும்பத்தினர் ஆசியுடன் நாங்கள் பழங்குடியினர் முறைப்படி திருமணம் செய்து கொண்டோம்.
ஸ்வீடனுக்கு செல்லவேண்டிய நாள் நெருங்க நெருங்க ஷெட்வின் என்னை உடன் வருமாறு அழைத்தார். ஆனால், நான் படிப்பை முடிக்க வேண்டியிருந்ததால், விரைவில் அவள் வசிக்கும் ஸ்வீடனின் டெக்ஸ்டைல் நகரமான போராஸுக்கு வருவதாக உறுதியளித்தேன்.
பின்னர் நாங்கள் கடிதம் மூலம்தான் தொடர்பு கொண்டோம், பேசிக் கொண்டோம்.
ஒரு வருடம் கழித்து ஸ்வீடன் சென்று ஷெட்வினை சந்திக்கலாம் என்று திட்டமிட்டபோது என்னிடம் விமான டிக்கெட் வாங்கக்கூட பணம் இல்லை. எனக்குச் சொந்தமான பொருள்களை விற்று ஒரு சைக்கிளை வாங்கினேன்.
ஸ்வீடனுக்கு சைக்கிளில் செல்ல முடிவு செய்தேன். அடுத்த நான்கு மாதங்களில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் வழியாக துருக்கி சென்றேன். அதற்குள் எனது சைக்கிள் பல முறை பழுதாகியது. சில சமயங்களில் சாப்பிடுவதற்குகூட வழியில்லாமல் இருந்தது. ஆனாலும், எப்படியும் ஸ்வீடன் சென்று ஷெட்வினை சந்தித்துவிடுவது என்று மன உறுதியுடன் இருந்தேன்.
கடந்த 1977 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி தொடங்கியது எனது சைக்கிள் பயணம். தினமும் சராசரியாக 70 கி.மீ. சைக்கிளில் சென்றேன். ஓவியம் கற்றுக்கொண்டது எனக்கு கை கொடுத்தது. நான் சென்ற இடங்களி்ல் ஓவியம் வரைந்து கொடுத்து பணம் சம்பாதித்தேன். சிலர் எனக்கு பணம் கொடுத்து உதவினார்கள். சிலர் எனக்கு உணவும், தங்க இடமும் கொடுத்து ஆதரித்தனர். ஒரு வழியாக அந்த ஆண்டு மே மாதத்தில் இஸ்தான்புல் வழியாக வியன்னா சென்றேன். பின்னர் அங்கிருந்து ரயில் மூலம் கோதென்பர்கிற்கு சென்றேன்.
ஸ்வீடன் சென்ற நான், அங்கு ஷெட்வினை சந்தித்து அதிகாரபூர்வமாக திருமணம் செய்துகொண்டேன்.
எனக்கு எல்லாமே புதிதாக இருந்தது. ஆனால், எனது ஒவ்வொரு செயலுக்கும் மனைவி , ஷெட்வின் ஆதரவுக்கரம் நீட்டினார். என்னை பொருத்தவரை அவள் எனக்கு சிறந்த பெண்மணிதான். 1975 ஆம் ஆண்டு நான் அவள் மீது என்ன அன்பு வைத்திருந்தேனோ அதே அன்பை இன்றும் வைத்திருக்கிறேன்” என்றார் மகாநந்தியா.
ஸ்வீடனில் வசிக்கும் அந்த அன்யோன்ய தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. மகாநந்தியா ஓவியராக பணியைத் தொடர்கிறார். இந்நிலையில், 46 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மகாநந்தியாவின் சைக்கிள் சாகச பயணம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.