மகளின் பெயர் சூட்டு விழாவில் 'மன் கி பாத்' நிகழ்ச்சியை ஒளிபரப்பி ஆனந்தம்! - பள்ளி ஆசிரியரின் வித்தியாசமான முயற்சி!
ஒவ்வொரு மாதமும் பிரதமர் மோடி, ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) எனும் தலைப்பில் நாட்டு மக்களுடன் உரையாடி வருகிறார் என்பது பழைய செய்தி. ஆனால், இந்த நிகழ்ச்சியானது எந்தவகையில் பொதுமக்களை ஈர்த்திருக்கிறது என்பது தான் இன்றைய புதிய செய்தி.
சம்பல்பூரின் நக்டிட்யூல் பிளாக்கில் இருக்கும் உபர்முண்டாவைச் சேர்ந்த 28 வயது பள்ளி ஆசிரியர் செளமிய ரஞ்சன் ரவுலா. இவர், பிரதமரின் “மன் கி பாத்” நிகழ்ச்சியின் தீவிர அபிமானி. இதுவரை ஒரு எபிசோடைக் கூட தவறவிட்டதில்லை. அத்தனை பெரிய ரசிகர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இவரது ஆர்வத்தை!
இவருக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்திருந்தது. குழந்தையின் பெயர் சூட்டு விழாவை இந்த மாதம் நடத்த திட்டமிட்டிருந்தார். விழா சரியாக இந்த மாதம் ஞாயிறு அன்று நடத்தப்படலாம் என முடிவாகியது. ரவுலாவுக்கோ ஒரே சந்தோஷமாகி விட்டது.
ஞாயிறு அன்று தான் பிரதமர் உரையாடவிருக்கும் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அன்றைய தினம் தனது மகளின் பெயர் சூட்டும் விழாவில் கலந்து கொள்வோர், விழாவின் காரணமாக அத்துணை நல்ல நிகழ்ச்சியை தவற விட்டு விடக்கூடாதே! என்று நினைத்து உடனடியாக அந்நிகழ்ச்சியை புரஜெக்டர் அமைத்து விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் கேட்டு ஆனந்திக்கும் விதமாக ஒரு ஏற்பாட்டைச் செய்து அசத்தி விட்டார்.
ரவுலாவின் வீட்டில் நடந்த பெயர் சூட்டும் விழாவில் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர். அதில் 500 பேராவது இந்நிகழ்ச்சியை முழுதாகக் கண்டு களித்தனர் என்கின்றன ஊடகச் செய்திகள்.
பெயர் சூட்டு விழாவில் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியை ஒளிபரப்புவது என்பது புதுமையான முயற்சியே! எனவே இது குறித்து ரவுலாவிடம் விசாரித்த போது, நான் கடந்த சில வருடங்களாகவே பிரதமரின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன். அந்த நிகழ்ச்சியோடு நான் உணர்வுப்பூர்வமாகப் பிணைக்கப்பட்டுள்ளேன். என் வீட்டு விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்கள் மிகுந்த விருப்பத்துடன் இந்த எபிசோடை முழுமையாகக் கண்டு களித்ததை எண்ணி நான் மிகப் பெருமையாக உணர்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.
வீட்டு விழாக்களில் பெரும்பாலும் சூப்பர் ஹிட் திரைப்படங்களைத் திரையிடுவது வழக்கம் அல்லது சிறுவர்களுக்கான விழாக்கள் என்றால் மேஜிக் ஷோ, விளையாட்டு நிகழ்ச்சிகள் என்று எதையாவது நடத்தி விருந்தினர்களைச் சந்தோசப்படுத்த முயற்சிப்பார்கள் பலர். ஆனால், பொறுப்பு மிக்க ஆசிரியர் பதவியில் இருக்கும் ஒருவர், மிகுந்த தன்னம்பிக்கையுடன் பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியைத் தன் வீட்டு விழாவில் விருந்தினர்கள் முன்னிலையில் ஒளிபரப்பி இருப்பது வித்தியாசமான முயற்சி என்று அங்கிருந்தோரால் பாராட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.