விலைவாசி உயர்வால் தவிக்கும் மக்களுக்கு மேலும் ஒரு இடி!

விலைவாசி உயர்வால் தவிக்கும் மக்களுக்கு மேலும் ஒரு இடி!

ஏற்கெனவே பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வார் தவித்து வரும் மக்களுக்கு இப்போது மேலும் ஒரு அடி. அதாவது வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும், வர்த்தக உபயோகத்துக்கான சிலிண்டர் விலையையும் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு மார்ச் 1 ஆம் தேதி முதலே அமலுக்கு வந்துள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் (எல்.பி.ஜி.) விலை உயர்த்தப்பட்டுள்ளது. எவ்வளவு தெரியுமா? வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ.50- ம், வர்த்தக ரீதியிலான சிலிண்டர் விலை ரூ.350-ம் உயர்த்தப்பட்டுள்ளது.

தில்லியில் ஏறக்குறைய 6 மாதங்களுக்குப் பிறகு எல்.பி.ஜி. சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த முறை, தில்லியில் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது.

19 கிலோ எடையுள்ள வர்த்தக உபயோக சிலிண்டர் விலை ரூ.350 உயர்ந்துள்ளது. இனி வர்த்தக உபயோகத்துக்கான சிலிண்டர் தில்லியில் ரூ.2119.50 காசுகளாக இருக்கும். இதனிடையே வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள எல்.பி.ஜி. சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதன் விலை இனி தில்லியில் ரூ.1,103.

முக்கிய நகரங்களில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை விவரம் வருமாறு:

புதுதில்லி ரூ.1,103 (பழைய விலை ரூ.1,053). கொல்கத்தா ரூ.1,079, மும்பை ரூ.1,052, சென்னை ரூ.1,068.50 காசுகள். பெங்களூரு ரூ.1,055.50 காசுகள், ஹைதராபாத் ரூ. 1,105. லக்னெள ரூ.1,090.50 காசுகள், பாட்னா ரூ.1,201.

இந்த ஆண்டு இரண்டாவது முறையாக வர்த்த உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 1 ஆம் தேதி சிலிண்டருக்கு ரூ.25 விலை உயர்த்தப்பட்டது.

வீட்டு உபயோகத்துக்கான எல்.பி.ஜி. சிலிண்டர்களின் விலை கடந்த ஆண்டு (2022) ஜூலை 6 ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக ரூ.153 வரை உயர்த்தப்பட்டுள்ளது. விலை நான்கு முறை உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.50 உயர்த்தப்பட்டது. பின்னர் மே மாதம் ரூ.50 –ம் தொடர்ந்து ரூ.3.50 காசுகளும் உயர்த்தப்பட்டது. இறுதியாக கடந்த ஆண்டு ஜூலையில் ரூ.50 உயர்த்தப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com