எப்போ பார்த்தாலும் ”வித் அவுட்”னா எப்படிங்க? கீழ இறக்கி விடுங்க முதல்ல!

எப்போ பார்த்தாலும் ”வித் அவுட்”னா எப்படிங்க? கீழ இறக்கி விடுங்க முதல்ல!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ஞாயிற்றுக் கிழமை காலை புறப்பட்ட எர்ணாகுளம் டாடா நகர் விரைவு ரயில் போத்தனூர், திருப்பூர் ஈரோடு வழியாக நேற்று பகல் 2.50 மணி அளவில் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் வந்து அடைந்தது.

ரயிலின் முன்பதிவுப் பெட்டியில் பயணச் சீட்டு இல்லாமலும், முன் பதிவு செய்யாமலும் ரயிலுக்காகக் காத்திருந்த வட மாநிலத் தொழிலாளர்கள் பலர் ஏறி அமர்ந்தனர்.

சேலத்தை அடுத்த கருப்பூர் தின்னப்பட்டி ரயில்நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது முறைப்படி முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு ரயிலில் அமர இருக்கை இல்லாததால் இருக்கைகளை ஆக்கிரமித்திருந்த வடமாநிலத் தொழிலாளர்களுக்கும், ஏற்கனவே முறையாக முன் பதிவு செய்து ரயிலில் ஏறி இருந்த தமிழ்நாட்டுப் பயணிகளுக்கும் இடையே தகராறு மூண்டது.

இதைக் கண்ட ரயில்வே பயணச் சீட்டு பரிசோதகர்கள், சேலம் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும், சேலம் ரயில் நிலைய போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி தகராறு நடந்து கொண்டிருந்த ரயில் தின்னப்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்புபடை உதவி கமிஷனர் ரிதீஸ் பாபு, இன்ஸ்பெக்டர் ஸ்மித், சேலம் ரயில் நிலைய இன்ஸ்பெக்டர் சிவ செந்தில் குமார் உள்ளிட்டோர் தின்னப்பட்டி ரயில் நிலையம் வந்தனர்.

ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் சேலம் நயில் நிலைய போலீஸார், டாடா நகர் விரைவு ரயிலில் குறிப்பிட்ட முன்பதிவுப் பெட்டியில் இருந்த சுமார் 9 ஆண்கள், 25 பெண்கள் என மொத்தம் 100 மேற்பட்டவர்களால் அந்த முன் பதிவுப் பெட்டியி ஆக்ரமித்திருந்த வடமாநிலப் பயணிகளை பெட்டி படுக்கைகளுடன் கீழே இறக்கி விட்டனர். இவர்கள் ஜார்கண்ட் மற்றும் ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

ரயிலில் முன்னதாக வந்து அமர்ந்து கொண்டால் மட்டுமே இது போன்ற முன் பதிவுப் பெட்டிகளில் பயணிக்க முடியாது, முறையாக முன் பதிவு செய்து டிக்கெட்டுகள் வைத்திருக்க வேண்டும் என்றும் அங்கிருந்த போலீஸார் அவர்களுக்கு அறிவுரை கூறினர்.

இந்தப் பிரச்சினையால் டாடாநகர் விரைவு ரயில் ஒன்றரை மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு புறப்பட்டுச் சென்றது.

இதனால் மற்ற பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள்.

இதனிடையே கீழே இறக்கி விடப்பட்ட வித் அவுட் பயணிகள் ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டை செல்லும் பயணிகள் ரயிலில் பயணச் சீட்டு எடுக்க வைத்து ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

அப்போது அங்கிருந்த பயணிகள் எப்போதாவது யாராவது ஒருவர் அறியாமலோ அல்லது பணமில்லாமலோ வித் அவுட் டிக்கெட்டில் வந்தால் பரவாயில்லை, சகித்துக் கொள்ளலாம், ஆனால், இவர்கள் எப்போதுமே வித் அவுட்டில் தான் பயணிப்போம் என்று கொள்கையோடு திரிந்தால் எப்படி?என்று ஆதங்கத்துடன் பேசி கொண்டே கலைந்து சென்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com