மும்பை காவலரின் மனிதநேயத்துக்கு பாராட்டு!
மும்பை போக்குவரத்து காவலர் ஒருவரின் மனிதநேயச் செயல் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. டுவிட்டரை ( சுட்டுரை ) பயன்படுத்தும் வைபவ் பார்மர் என்பவர் சாலையில் சறுக்கலான இடங்களில் வாகன ஓட்டிகள் ஸ்லிப் ஆகி விழுந்துவிடாமல் இருக்கும் வகையில் அந்த இடங்களில் மண்ணைத் தூவி சரி செய்யும் காவலரின் செய்கையை விடியோவில் பகிர்ந்துள்ளார்.
அந்த விடியோவின் கீழ், பாண்டூப் பம்பிங் சிக்னல் அருகே சாலையின் வளைவில் மழைநீர் தேங்கியுள்ளதால் பைக், ஸ்கூட்டர் போன்ற வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் சறுக்கி விழுந்துவிடாமல் இருக்க நல்லெண்ண முயற்சியாக மும்பை காவலர் ஒருவர் அந்த இடங்களில் மண்ணை தூவிவிட்டுள்ளார். அவருக்கு “சல்யூட்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மழையால் சாலை மோசமாக இருக்கும் நிலையில் இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் சறுக்கி விழுந்து முழங்காலில் காயமடைந்தார். இதைப் பார்த்த காவலர், மற்றவாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்காமல் இருக்க அந்த இடத்தில் மண்ணை தூவியுள்ளார். போலீஸ் அதிகாரி ஒருவர் அந்த இடத்தை சரிசெய்ய தீயணைப்பு படைக்கு தகவல் அனுப்பினார். ஆனாலும் அதுவரை காத்திருக்காமல் இந்த காவலர் தனது சேவையை மேற்கொண்டார் என்றும் வைபவ் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவர், அந்த காவலரின் பெயர் என்ன என்று கேட்டுள்ளதுடன் அவரை பொதுமக்கள் முன்னிலையில் பாராட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். காவலர்களின் பணி என்பது சிரமங்கள் நிறைந்தது. அவர்கள் நீண்டநேரம் பணிபுரிய வேண்டியுள்ளது. கடும் வெயில், மழையிலும் அவர்கள் கடமையைச் செய்கிறார்கள். நாள்முழுவதும் பணி
செய்யும் அவர்கள் நச்சுவாயுக்களையும் சுவாசிக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடியோ வைரலாக வெளியானதை அடுத்து பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். காவலரின் நற்செயலை புகைப்படம் எடுத்து விடியோவாக வெளியிட்ட நபருக்கு பலரும் நன்றி தெரிவித்துள்ளனர்.
சார்… இந்த விடியோவை வெளியிட்ட உங்களுக்கு நன்றி. சமூகத்தில் மக்களுக்கு சேவையாற்றும் சிலரை நாம் தகுந்த நேரத்தில் கெளரவிக்க வேண்டும் என்பதுதான் எனது தனிப்பட்ட கருத்தாகும். வெறும் பாராட்டுகள் மட்டும் போதாது. இப்படிப்பட்ட நபர்களை கெளரவித்தால்தான் மற்றவர்களுக்கும் சமூக சேவை செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கும் என்று ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
போலீஸ் துறையிலும் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள். தங்கள் கடைமையையும் மீறி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று கூறி ஒருவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த விடியோவை 61,000 பேர் பார்வையிட்டுள்ளனர்.