பள்ளம் தோண்டணுமா? சொல்லிட்டு செய்யுங்க!

பள்ளம் தோண்டணுமா? சொல்லிட்டு செய்யுங்க!

தரைக்கடியில் புதைந்துள்ள மின்சார கேபிள், தண்ணீர் குழாய், எரிவாயு குழாய், கழிவு நீர் இணைப்புகள் பற்றிய விபரங்களையும் அவற்றை பராமரிக்கும் காண்ட்ராக்டர், அவர்களது தொடர்பு எண்கள் என அனைத்தையும் சமர்ப்பிக்குமாறு மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

5 ஜி சேவையை 2023 ஆண்டு இறுதிக்குள் கொண்டு வந்துவிடவேண்டும் என்று மோடி அரசு தீவிரமாக இயங்கி வருகிறது. இதற்காக கேபிள் அமைக்கும் பணிகள் நாடு முழுவதும் முழு வீச்சில் நடந்து வருகின்றன. பைபர் அமைக்கும் பணியில் உள்ளூர் குழாய் இணைப்புகள் குறுக்கிடுவதால் பணி தாமதமாகிறது. சில இடங்களில் பைபர் இணைப்புகள் பழுதாகி, துண்டிக்கப்படுவதும் பெரிய சவாலாக இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சம் ஆப்டிக் பைபர் இணைப்புகள் துண்டிக்கப்படுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இதனால் நாட்டுக்கு 3000 கோடி இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பை குறைக்கவேண்டுமென்றால் மத்திய, மாநில அரசுகள், உள்ளூர் நிர்வாகம், தனியார் அமைப்புகள், பொதுமக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

உள்ளாட்சி அமைப்புகளோ அல்லது தனியார் அமைப்புகளோ இனி எந்த சாலையை தோண்ட வேண்டுமென்றாலும் தகவல் தெரிவித்தாக வேண்டும். இதற்காகவே கால் பிபோர் யூ டிக் (CBUD) என்னும் மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறிய அளவிலான பள்ளம் தோண்ட வேண்டுமென்றாலும் மாநகராட்சி அல்லது நகராட்சி, பஞ்சாயத்து அலுவலகத்தில் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும். அவர்களிடமிருந்து அனுமதி பெற்ற பின்னர்தான் தோண்டப்படவேண்டும். பணி முடிந்ததும் அதை மூடிவிடவேண்டும். இது, ஏற்கனவே உள்ள நடைமுறை என்றாலும், பல இடங்களில் முறையாக பின்பற்றப்படுவதில்லை.

கோடிக்கணக்கான ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்படும் 5ஜி பைபர் இணைப்புகள் உள்ளூர் பராமரிப்பு பணிகளால் பழுதாகிவிட்டால் என்ன செய்வது? அதற்காகத்தான் கால் பிபோர் யூ டிக் (CBUD) என்னும் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எதைத் தோண்டமெண்டுமென்றாலும் சிபியூடி ஆப்பில் அது குறித்த விபரங்களை சமர்ப்பித்துவிட்டுதான் தோண்ட ஆரம்பிக்க வேண்டும். முதல் கட்டமாக சிபியூடி ஆப், குஜராத் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் கட்டாயம் பயன்படுத்தி, பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

காலையில் கண்விழித்து, வீட்டை விட்டு வெளியே வந்தால் யாராவது ஒரு பள்ளம் தோண்டியிருப்பதை பார்க்க முடிகிறது. இனி அவற்றை தடுக்க முடியுமா? சாத்தியமில்லை என்றாலும், குறைந்தபட்சம் யார் தோண்டிப் போட்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளமுடியும். அதுவே பெரிய விஷயம்தானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com