அயோத்தி கோவில் பூஜாரியா நீங்கள்? அமித் ஷாவுக்கு கார்கே கேள்வி !

அயோத்தி கோவில் பூஜாரியா நீங்கள்? அமித் ஷாவுக்கு கார்கே கேள்வி !

வரும் மார்ச் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திரிபுரா மாநிலம், சப்ரூமில் நடைபெற்ற ரதயாத்திரை பேரணியில் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, அயோத்தி கோவில் தொடர்பாக ராகுலை கடுமையாக விமர்சித்தார்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலையில் அங்கு கோவில் கட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காங்கிரஸ் காலம் கடத்தியதால் இந்த விவகாரம் வழக்கில் சிக்கியது. நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றவுடன் வழக்கு தொடர்பான தீர்ப்பு வந்தது. இதையடுத்து பிரதமர் மோடி, அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் அமைய உள்ள இடத்தில் பூமி பூஜை செய்து கட்டுமானப் பணியைத் தொடங்கிவைத்தார்.

ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அயோத்தி கோவில் திறக்கும் தேதியை பா.ஜ.க. அரசு அறிவிக்குமா என அடிக்கடி கேள்வி எழுப்பி வருகிறார். வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்படும் என்று அவருக்கு உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இதனிடையே ஹரியானா மாநிலம் பானிபட்டில் ராகுல் தலைமையில் நடைபெற்று வரும் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “அயோத்தி கோயில் 2024 ஜனவரியில் திறக்கப்படும் என்று அமித்ஷா அறிவித்துள்ளார். அப்படி அறிவிக்க அவருக்கு என்ன தகுதி உள்ளது.

எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளது. இந்த ஆண்டு திரிபுராவில் சட்டப்பேரவைத் தேர்தலும், அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலும் நடைபெற உள்ள நிலையில் அதை ஏன் அறிவிக்க வேண்டும்.

நீங்கள் என்ன ராமர் கோவில் தலைமைப் பூஜாரியா? இல்லை அயோத்தி கோவில் அறக்கட்டளையைச் சேர்ந்தவரா. இது குறித்து நீங்கள் பேச வேண்டாம். மகான்களும் சன்னியாசிகளும்தான் அதை முடிவு செய்ய வேண்டும்.

நீங்கள் ஓர் அரசியல்வாதி, நாட்டை பாதுகாப்பதும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதும், மக்கள் தேவையை பூர்த்தி செய்வதும், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்வதும்தான் உங்கள் வேலை.

வேலைவாய்ப்பை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்தீர்கள். அதை பா.ஜ.க. அரசு நிறைவேற்றவில்லை.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு செய்வதாக வாக்குறுதி அளித்தீர்கள். விவசாயிகளுக்கு குறைந்தபட்ட ஆதார விலையை உறுதி செய்வதாக கூறினீர்கள் அவையும் நடக்கவில்லை.

நாட்டில் வேலையின்மை, பணவீக்கம், பொருளாதாரத்தில் தொய்வுநிலை இருக்கும்போது அதைப்பற்றி சிந்திக்காமல் தேர்தலை பற்றியே நீங்கள் சிந்திப்பது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் அயோத்தி ஸ்ரீராமர் ஆலய அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், அயோத்தியில் ராமர் ஆலயம் எப்போது கட்டி முடிக்கப்படும், எப்போது ராமரை தரிசிக்கலாம் என மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

அயோத்தி ராமர் ஆலயப் பணிகள் திட்டமிட்டபடி முடிக்கப்பட்டு வரும் 2024 ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி, மகர சங்கராந்தி தினத்தன்று கருவறையில் ஸ்ரீராமர் சிலை நிறுவப்பட்டு

பக்தர்கள் தரிசினத்திற்கு திறந்துவிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com