ராணுவ வாகனம் தாக்குதல்: தீவிரவாதிகளுக்கு உதவிய 6 பேர் கைது!

ராணுவ வாகனம் தாக்குதல்: தீவிரவாதிகளுக்கு உதவிய 6 பேர் கைது!

காஷ்மீர், பூஞ்ச் பகுதியில் கடந்த 20ம் தேதி தீவிரவாதிகள் ராணுவ வாகனம் மீது பயங்கரத் தாக்குதல் நடத்தினர். இதில் ஐந்து ராணுவ வீரர்கள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக தீவிர விசாரணை செய்து வந்த போலீசார், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததாக உள்ளூரைச் சேர்ந்த 6 நபர்களைக் கைது செய்து இருக்கிறார்கள்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த டிஜிபி தில்பக் கூறும்போது, “இந்திய ராணுவ வாகனத்தின் மீது மூன்று முதல் ஐந்து தீவிரவாதிகள் சேர்ந்து தாக்குதல் நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. இது சம்பந்தமாக 200க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததாகக் கருதப்படும் ஆறு பேரை கைது செய்து இருக்கிறோம். இவர்கள் அந்தத் தீவிரவாதிகளுக்குக் கடந்த மூன்று மாதங்களாக உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றைக் கொடுத்து வழிகாட்டி இருக்கிறார்கள். இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் வந்துள்ளன. அதை உள்ளூர் நபர்கள் எடுத்துச் சென்று, தீவிரவாதிகளிடம் கொடுத்து இருக்கிறார்கள். காடு சார்ந்த பகுதிகளுக்கு அருகாமையில் இருக்கும் இடங்களை தாக்குதல் நடத்துவதற்கு தீவிரவாதிகள் தேர்வு செய்து இருக்கிறார்கள். அங்கு அவர்களுக்கு உள்ளூர் மக்களின் ஆதரவும், தாக்குதலுக்குப் பிறகு தப்பிச் செல்ல வழியும் கிடைத்து இருக்கிறது.

பூஞ்ச் பகுதியைச் சேர்ந்த நிசார் என்பவர் கடந்த 1990ம் ஆண்டு முதல், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் கமாண்டர் உத்தரவுப்படி செயல்பட்டு வந்திருக்கிறார். அவரைக் கைது செய்து விசாரித்து வருகிறோம். நன்கு திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். அதோடு, ராணுவ வாகனத்துக்கு மிக அருகில் வந்து தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தி உள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர்கள் காயமடைந்த பிறகு, சக்தி வாய்ந்த வெடிகுண்டை வாகனத்தில் வைத்து வெடிக்கச் செய்து இருக்கிறார்கள். இந்தத் தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் பல மாதங்களாக நோட்டமிட்டு இருக்கின்றனர்” என்று அவர் கூறி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com