ஆருத்ரா பண மோசடி  - அதிரடி கைதுகள், தொடரும் விசாரணை;  பின்னணியில் பா.ஜ.க நிர்வாகிகளா?

ஆருத்ரா பண மோசடி - அதிரடி கைதுகள், தொடரும் விசாரணை; பின்னணியில் பா.ஜ.க நிர்வாகிகளா?

ருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக நடந்த கைதுகளும் அது தொடர்பான விசாரணைகளும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.  இது தொடர்பாக திரைப்பட நடிகர் ஆர். கே. சுரேஷ் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாகவும், விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கிளைகள் உண்டு.  சென்னை அமைந்தகரையில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கு லட்சக்கணக்கான வாடிக்கை யாளர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

ஆருத்ரா கோல்டு ட்ரேடிங் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் குறைந்தபட்சம் 8000 ரூபாய் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சில லட்சங்களை சேமிப்பாக கைவசம் வைத்துள்ள நடுத்தர குடும்பத்தினர் இதில் முதலீடு செய்திருக்கிறார்கள்.

ஏறக்குறைய ரூபாய் 2,438 கோடி பணத்தை நிறுவனம் வசூலித்ததாகவும், பேசியபடி நிறையபேருக்கு பணத்தை திருப்பித் தரவில்லை என்றும் புகார்கள் எழுந்தது. கடந்த மூன்று மாதங்களில் சென்னை, காஞ்சிரம் பகுதியைச் சேர்ந்தவர்களிடமிருந்து ஏராளமான புகார்கள் பெறப் பட்டதாக செய்திகள் வெளியாகின. புகார்களை முன் வைத்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையை ஆரம்பித்தது.

ஆருத்ரா நிறுவனத்தைச் சேர்ந்த  இயக்குநர்கள் 14 பேர் மீதும் ஆருத்ரா பெயரில் இயங்கி வந்த இன்னும் சில நிறுவனங்களின் நிர்வாகிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை ஆரம்பமானது.  இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் ஹரீஷ் என்பவரும் கைது செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது.

பாஜகவின் விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ள ஹரீஷ், ஆருத்ரா மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டார். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையுடன் அவர் இருக்கும் புகைப்படம் தமிழ்நாட்டு அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் மாநில அளவில் பெரும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.

ஆருத்ரா பண மோசடி வழக்கு தொடர்பாக பா.ஜ.க நிர்வாகிகள் சிலரிடம் விசாரணை நடத்தப்படுவதாக இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஹரீஷ் கைது செய்யப்பட்ட பின்னர் நடந்து வரும் விசாரணை அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. வழக்கில் முக்கிய திருப்பமாக ரூசோ என்பவர் கைது செய்யப்பட்டார்.  காஞ்சிபுரத்தில் ஐஏஎஸ் அகாடமி பயிற்சி மையம் நடத்தி வரும் ரூஸோவுக்கு சினிமா தொடர்புகள் இருந்திருக்கின்றன. இவர் நடிகர் ஆர். கே. சுரேஷ்க்கு நெருக்கமானவராக இருந்திருக்கிறார்.

ஆர். கே. சுரேஷ் தற்போது இந்தியாவில் இல்லை. விசாரணையை தவிர்ப்பதற்காக துபாய்க்கு சென்று விட்டதாகவும் சொல்லப்படுகிறது.  ஆருத்ரா மோசடி சம்பந்தமாக எத்தனை கைதுகள், விசாரணை பற்றிய விபரங்கள் ஊடகங்களில் வெளிவராத அளவுக்கு ரகசியமாக நடைபெற்று வருகின்றன. 

பா.ஜ.க நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் ஆளுங்கட்சியினர் கவனமாக செயல்பட நினைப்பதாக ஒரு தரப்பும், இதில் பா.ஜ.க நிர்வாகிகளை சிக்க வைக்க முயற்சி நடப்பதாக இன்னொரு தரப்பும் நினைக்கின்றன. எது எப்படியோ, மிடில் கிளாஸ் மக்களின் சேமிப்புகள் பத்திரமாக திரும்பக் கிடைத்தால் சரி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com