அஸ்ஸாம் பெண் சிங்கம் ஜுன்மொனி ரபா சாலை விபத்தில் மரணம்!

அஸ்ஸாம் பெண் சிங்கம் ஜுன்மொனி ரபா சாலை விபத்தில் மரணம்!

‘அஸ்ஸாம் மாநிலத்தில் பெண் சிங்கம்‘ என்று அழைக்கப்பட்டவர் ஜுன்மொனி ரபா. 30 வயது சப் இன்ஸ்பெக்டரான இவர், நேற்று நள்ளிரவு தனியாகக் காரில் சென்றபோது கண்டெய்னர் லாரி ஒன்று அவர் கார் மீது மோதியதில் உயிரிழந்து இருக்கிறார். முன்னதாக, இவர் பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, கிரிமினல் குற்றங்களைச் செய்வோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதில் சற்றும் இரக்கம் காட்டாதவர்.

நகாவ் மாவட்டம், சருபுகியா என்ற கிராமத்தில் இந்த விபத்து நடந்து இருக்கிறது. காரில் ஜுன்மொனி மட்டும் சீருடை இன்றி தனியாகச் சென்று இருக்கிறார். விபத்து நடந்ததும் தகவல் அறிந்த போலீஸார் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உள்ளனர். ஆனால், போகும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் உடனே அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

இந்த விபத்து அதிகாலை சுமார் 2.30 மணியளவில் நடைபெற்று இருக்கிறது. நள்ளிரவு நேரத்தில் இவர் மட்டும் ஏன் தனியாகச் சென்றார் என்பது மர்மமாக உள்ளது. மேலும், இந்த விபத்து குறித்து அவரது தாயார் சுமித்ரா கூறும்போது, “இது திட்டமிட்ட படுகொலை. எனது மகளின் இறப்பில் பாரபட்சமில்லாமல் விசாரணை நடத்த வேண்டும். அதோடு  என் மகளின் இறுதிச் சடங்குக்காக எங்களது வீட்டில் பறிமுதல் செய்த ஒரு லட்சம் ரூபாயை போலீஸார் திரும்பக் கொடுக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார். இந்த விபத்து நடப்பதற்கு முந்தைய நாளில்தான் ஜுன்மொனி வீட்டில் போலீஸார் ரெய்டு நடத்தி ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து எடுத்துச் சென்று இருக்கிறார்கள். மேலும், ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது மிரட்டி பணம் பறித்ததாக வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த விபத்து குறித்து சிஐடி விசாரணைக்கு மாற்றி மாநில டிஜிபி பிரதாப் சிங் உத்தரவிட்டு இருக்கிறார். விபத்தில் இறந்த ஜூன்மொனி சமீப காலமாக நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருந்தார். மேலும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஊழல் தொடர்பாக ஜுன்மொனி கைது ஆனார். இதனால் இவர் பணியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com