ம.பி.யில் 'பார்'களுக்குத் தடை! உமா பாரதியின் போராட்டத்திற்கு முதல் வெற்றி!

ம.பி.யில் 'பார்'களுக்குத் தடை! உமா பாரதியின் போராட்டத்திற்கு முதல் வெற்றி!

பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மதுவிலக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உமாபாரதி. மக்களிடம் குடிபழக்கத்தை ஊக்குவித்து அதன் மூலம் வருவாய் ஈட்ட அரசு முயலக்கூடாது என்றும் பிரசாரம் செய்து வருகிறார். மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று அவர் நீண்டகாலமாகவே வலியுறுத்தி வருவதுடன் அதற்காக பல போராட்டங்களையும் நடத்தியுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் கோவில்களும் அரண்மனைகளும் நிறைந்த நிவாரி மாவட்டத்தின் ஓர்ச்சா நகரில், புதுமையான முறையில் மதுவிலக்கு போராட்டத்தை உமாபாரதி நடத்தினார். அதாவது மதுக்கடைகளின் முன்பு பசுமாடுகளை கொண்டுவந்து கட்டி “மக்களே மதுவை குடிக்காதீர்கள். மது குடிப்பதை கைவிட்டு அதற்கு பதிலாக பால் சாப்பிடுங்கள்” (ஷாராப் நஹீ, தூத் பியோ) என்று கோஷங்கள் எழுப்பி பிரசாரம் செய்தார்.

ம.பி. முன்னாள் முதல்வராக இருந்த அவர், செளஹான் தலைமையிலான அரசு குடிப்பழக்கத்தை மக்களிடம் தூண்டிவிட்டு அதன் மூலம் அரசுக்கு வருவாய் திரட்டக்கூடாது. மாநில அரசு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மதுவிலக்குக்கு எதிராக உமாபாரதி போராட்டம் நடத்துவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஜூன் மாதம் மதுக்கடைகள் மீது சாணத்தை தூக்கியெறிந்து போராட்டம் நடத்தினார். மேலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மதுக்கடைகள் மீது கற்களை வீசியும் போராட்டம் நடத்தினார்.

தற்போதுள்ள முதல்வர் சிவராஜ் சிங் செளஹான், துணிச்சல் மிகுந்தவர். தற்போதுள்ள மதுபானக் கொள்கைகளில் சில குறைபாடுகள் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். யோகா குரு ராம்தேவின் யோசனையுடன் அவர் புதிய கொள்கையை அறிவிக்கக்கூடும் என்று நம்புவதாக உமாபாரதி கூறியிருந்தார்.

எனினும் உமாபாரதியின் இந்த கருத்துக்கு பதிலளிக்க செளஹான் மறுத்துவிட்டார். புதிய மதுக் கொள்கை குடிப்பதை நிறுத்தும் வகையில் இருக்கும் என்று மட்டும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் உமாபாரதியில் பிரசாரத்திற்கும் போராட்டத்துக்கும் இப்போது பலன் கிடைத்துள்ளது. மாநிலத்தின் புதிய மதுபானக் கொள்கைக்கு செளஹான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி மதுபானக் கடைகளும் இணைந்து ‘பார்’ (மதுபானக்கூடம்) நடத்துவதற்கு தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இனி மதுபானக் கடைகளில் மதுபானம் விற்கப்படுமே தவிர அங்கு குடிக்க அனுமதியில்லை என்று மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்ல, கல்வி நிறுவனங்கள், கோவில்களிலிருந்து 100 மீட்டர் தூரம் தள்ளியே மதுமுபானக் கடைகள் இயங்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோர் மீது இனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநில அரசின் இந்த திடீர் முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com