இ-ஃபார்மஸிகளுக்கு தடை! சீன மேலாதிக்கத்தை தடுக்க இந்திய அரசின் உறுதியான முடிவு!
ஆன்லைன் மருந்து வர்த்தகம் மற்றும் இ பார்மஸி துறையில் சீனாவின் (FDI) அந்நிய நேரடி முதலீடு அதிகரித்து வருவதால், இ-ஃபார்மா மீதான இந்திய அரசின் ஒடுக்குமுறை தொடங்கவிருக்கிறது.
இந்தியாவின் ஆன்லைன் மருந்தக சில்லறை விற்பனைத்துறையில் கிட்டத்தட்ட ரூ.20,000 கோடி சீன முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவி வரும் புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், அண்டை நாடு இந்த பிரிவில் ரூ.20,000 கோடி நேரடி முதலீடுகளை வைத்திருப்பதால், ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்யும் முடிவில் அரசு உறுதியாக உள்ளதாக அரசு இயந்திர வட்டாரச் செய்திகள் கூறுகின்றன.
இ – பார்மஸியில் சீனக் கட்டுப்பாடு தேசியப் பாதுகாப்பிற்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று அரசு அஞ்சுகிறது. அத்தகைய முக்கியமான துறையில் அதன் ஆதிக்கத்தை இந்திய அரசாங்கம் விரும்பவில்லை. இருப்பினும், உயர்மட்ட அரசாங்க அதிகாரியின் கூற்றுப்படி, இந்தத் துறையில் ரூ. 50,000 கோடிக்கு மேல் அந்நிய நேரடி முதலீடு இருப்பதால் ஆன்லைன் மருந்து விற்பனையைத் தடை செய்வது ஒரே இரவில் நடக்காது. “இந்தப் பிரிவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 50,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருப்பதால் ஆன்லைன் மருந்து விற்பனையைத் தடை செய்ய நீண்ட காலம் ஆகலாம் என்று கருதப்படுகிறது.
சீன நிறுவனங்கள் ரூ.20,000 கோடி முதலீடு செய்துள்ளன. ஆன்லைன் பிரிவில் இந்தப் பங்கு மிகவும் அதிகமாக இருப்பதால், இந்திய அரசு இதைத் தடை செய்ய முனையும் போது சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் பல நிறுவனங்கள் நீதிமன்றம் வாயிலாக அரசாங்கத்தின் தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம், ”என்று அரசு தரப்பில் கருதப்படுகிறது. இந்நிலையில் அமேசான், ப்ராக்டோ, டாடா1எம்ஜி, பார்ம் ஈஸி, அப்பல்லோ, ஜீ லேப்ஸ் மற்றும் ஹெல்த்கார்ட் உள்ளிட்ட 12 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு தேவையான உரிமம் இல்லாமல் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்ததற்காக அரசு ஷோ காஸ் நோட்டீஸ் வழங்கியது குறித்தும் நாம் யோசிக்க வேண்டும். இது குறித்த செய்திகள் முன்பே ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
ஷோ காஸ் நோட்டீஸ்களுக்கு கிடைத்த பதில்களில் இந்திய அரசாங்கம் திருப்தி அடையவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “சீன மேலாதிக்கத்தின் கீழ் ஆன்லைன் வாயிலாக மருந்துகளை விற்பனை செய்ய அனுமதிப்பதால் எதிர்காலத்தில் கடுமையான பின்விளைவுகள் ஏற்படலாம்.
முதலாவதாக, தரமற்ற மருந்துகளை விற்பனை செய்வதை அதிகரித்துக் கொண்டு, மாறாக எதிர்காலத்தில் உயிர் காக்கும் அத்தியாவசியத் தேவைக்கான மருந்துகளை வழங்குவதை சீனா நிறுத்தக்கூடும்” என்று இந்திய அரசு கருதுகிறது.
இந்தியாவின் மொத்த மருந்து தேவையில் 80% மருந்துகள் சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவின் பார்மா துறையில் சீனாவே முக்கியப் பங்காளியாக இருந்து வருகிறது. இ-ஃபார்மசிகளுக்கு தடை விதிக்கும் மத்திய அரசின் உறுதியான முடிவில் இந்தியத் தொழில் வல்லுநர்கள் இரு பிரிவாகப் பிளவு பட்டுள்ளனர்.
இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அகில இந்திய இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறையின் முன்னாள் தலைவரும், "Healers or Predators: Healthcare Corruption in India" என்ற புத்தகத்தின் இணை ஆசிரியருமான சமிரன் நுண்டி கூறுவது என்னவென்றால்?
“ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்வதை தடை செய்யும் விஷயத்தில் நான் அரசாங்கத்துடன் உடன்பட்டுள்ளேன். ஆனால், அதற்காக ஆன்லைன் மருந்துகள் விற்பனைக்கான பூரணத் தடையை அமுல்படுத்துவது கடினம் என்று கருதுகிறேன் ஏனெனில் அந்த தடையின் காரணமாக இங்கு சரியான மருந்து கிடைக்காமல் போகும் சூழல் நேரலாம். இங்கு மக்கள் பணத்தை மிச்சப்படுத்த மருத்துவர்களின் மருந்துச் சீட்டுகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கிறார்கள், அவர்கள் தவறான மருந்துகளை எடுக்காமல் காக்கும் எந்த விதமான தடுப்பு நடவடிக்கைகளும் நம்மிடம் இப்போது இல்லை. மேலும் மருந்து விற்பனையில் சட்டத்தை மீறும் மற்றொரு கருப்பு சந்தை இங்கே இருக்கிறது,ஆகவே பூரண தடுப்பு நடவடிக்கையை என்னால் முழு மனதோடு அங்கீகரிக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.
ஆயினும், உலக அளவில் சீன ஆதிக்கம் அனைத்துத் துறைகளிலும் மேலோங்கி வருவதைத் தொடர்ந்து இந்தியா தன் பாதுகாப்பு அரண்களை வலுப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள விரும்புகிறது என்பதே அரசு வட்டார அதிகாரப்பூர்வ தகவல்.