பெங்களூர் ஆட்டோக்களில் விரைவில் QR குறியீடு வசதி! பயணிகள் எளிதில் புகார் அளிக்கலாம்!
பெங்களூரில் விரைவில் ஆட்டோக்களில் டிரைவரின் பின்னிருக்கையில் QR குறியீடுகள் ஒட்டப்படும். இதன் மூலம் ஆட்டோக்களில் பயணிகளுக்கு டிரைவர்களால் ஏதேனும் பிரச்னை ஏற்படுமானால் எளிதில் புகார் அளிக்க முடியும்.
பெங்களூர் நகர ஆட்டோக்களில்தான் முதன்முறையாக 2005 ஆம் ஆண்டில் ஆட்டோக்களில் டிரைவர் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
QR குறியீடு முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்துடனும், நகரில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பெங்களூர் மாநாகர போக்குவரத்து சிறப்பு கமிஷனர் எம்.ஏ.சலீம் தெரிவித்துள்ளார்.
QR குறியீட்டு முறை ஏற்கெனவே மும்பை உள்ளிட்ட சில நகரங்களில் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது விவரங்களை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை திருத்தி அமைத்து வெளியிட வேண்டும் என்ற விதி அமலில் உள்ளது. ஆனால், நடைமுறையில் அவை சரிவர அமல்படுத்தப்படுவதில்லை.
தற்போது ஆட்டோக்களில் இருக்கும் டிரைவர் பெயர், முகவரி போன்ற விவரங்கள் சரியானதா என்பது கேள்விக்குறியே. இந்நிலையில் இந்த புதிய QR குறியீட்டுமுறை ஒரு நல்ல திட்டம்தான் என்கிறார் ஆதர்ஷா ஆட்டோ யூனியனைச் சேர்ந்த எம்.மஞ்சுநாத்.
ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் கேட்டாலோ, அல்லது சவாரி வருவதற்கு மறுத்தாலோ, அல்லது பயணிகளிடம் முறைதவறி நடந்து கொண்டாலோ இந்த QR குறீட்டை பயன்படுத்தி எளிதில் புகார் கொடுக்க முடியும்.
பெங்களூர் நகர போலீஸார் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள இந்த QR குறியீட்டு வசதியை வரவேற்கிறோம். ஆனால், ஆட்டோ ஓட்டுநர்கள் மீது அபராதம் விதிக்க இதை ஒரு கருவியாக போலீஸார் பயன்படுத்தக்கூடாது என்கிறார் பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஸ்ரீனிவாஸ்.
இதனிடையே ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர், பயணிகளிடம் நல்ல பெயர் எடுக்கும் டிரைவர்களை கண்டறிந்து அவர்களை அங்கீகரித்து விருது வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக மஞ்சுநாத் தெரிவித்துள்ளார்.
அதாவது, ஆட்டோ பயணம் எப்படி என்று கேட்டு பயணிகளிடம் கருத்து கேட்டு அதை ஒரு அட்டையில் பதிவு செய்ய நாங்கள் தீர்மானித்துள்ளோம். அதில் கிடைக்கும் தகவலை வைத்து நல்ல டிரைவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்க முடிவு செய்துள்ளோம் என்கிறார் மஞ்சுநாத்.
ஏற்கெனவே நகரில் ஓடும் ஆட்டோக்களில் பெரும்பாலானவற்றில் QR குறியீடு மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்போதெல்லாம் பயணிகள், தங்களிடம் பணம் இல்லை என்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துவதாகவும் கூறுகின்றனர். சில ஓட்டுநர்கள் தங்களது செல்போன் மூலம் பணம் பெறுகின்றனர். ஆனாலும் QR குறியீடு மூலம் பணம் செலுத்துவதுதான் பயணிகளுக்கும் எங்களுக்கும் வசதியாக உள்ளது என்கிறார் ஆட்டோ டிரைவர் சத்தியநாராயணா.
அதுசரி…. சென்னையில் இந்த திட்டம் வருமா? கடவுளுக்குத்தான் தெரியும்.