பீகாரில் சாக்கடை கால்வாயில் கட்டு கட்டாக மிதந்து வந்த ரூபாய் நோட்டுக்கள்

பீகாரில் சாக்கடை கால்வாயில் கட்டு கட்டாக மிதந்து வந்த ரூபாய் நோட்டுக்கள்

ணம் என்றால் பிணம் கூட வாயைத் திறக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்? கசக்கி எறிந்தாலும் கிழிந்தே இருந்தாலும் பணத்தின் மதிப்பு குறைவதில்லை. அதே போல் சாக்கடையில் கிடந்தாலும் அசூயை இன்றி நாங்கள் எடுப்போம் என்று அசால்ட்டாக சாக்கடையில் இருந்த பணத்தை எடுக்கப் போட்டி போட்டு கழுநீரில் இறங்கியுள்ளனர் பீகாரில் ஒரு பகுதி மக்கள்.

பீகாரின் ரோத்தாஸ் மாவட்டத்தில் உள்ள மொராதாபாத் கிராமத்தில் ஒரு சாக்கடை கால்வாயில் ரூபாய் மூட்டைகள் போடப்பட்டிருந்ததை நேற்று முன்தினம் காலை அவ்வழியே சென்ற சிலர் கண்டதாக கூறப்படுகிறது. உடனே அவர்கள் சாக்கடைக்குள் இறங்கி பணக்கட்டுகளை கைப்பற்ற தொடங்கினர். அப்போது கட்டுக்கள் பிரிந்து சாக்கடையில் ரூபாய் தாள்கள் மிதந்தபடி பரவின சில பணத்தாள்கள் சாக்கடை சேற்றுக்குள் அமிழ்ந்து போயின.

இதைப் பார்த்த பலரும் அங்கு சேர்ந்து  மீன் பிடிப்பது போல. சாக்கடையைத் துழாவி பணத்தை திரட்டினர். இதற்குள் தகவல் அறிந்த அக்கம்பக்கம் பகுதியைச் சேர்ந்த  ஏராளமானோர் அங்கு வந்து சாக்கடைக்குள் பாய்ந்து  ரூபாய் நோட்டுக்களை சேகரித்துக் கொண்டு மகிழ்ச்சியாக சென்றனர். உடலெங்கும்  வீசிய சாக்கடையின் வீச்சத்தைப்  பொருட்படுத்தாமல் பணத்தை எடுத்த மகிழ்ச்சியில் சாக்கடையிலிருந்து கரை ஏறினர் .  2000, 500, 100, 10  ரூபாய் நோட்டுகள் சாக்கடையில் இருந்ததாக   நேரில் பார்த்தவர்களும் அவற்றை திரட்டி எடுத்துச் சென்றவர்களும் கூறினார்கள். அவை எல்லாமே நல்ல நோட்டுகள்தான் என்றும் அவர் உறுதி தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவியது.

இது குறித்து பலரும் பலவிதமாக கருத்தை இணையதளங்களில் தெரிவித்துள்ளனர். “கொஞ்ச நாளைக்கு பொது இடங்களில் சில்லறையாக பணத்தை வாங்கிப் பயன்படுத்தாதீர்கள் சாக்கடையில் எடுத்த பணம் உலா வரலாம் என்று ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேறு சிலரோ ’’அதெல்லாம் அசல் ரூபாய் நோட்டுகள் தானா” என்று சந்தேகம் எழுப்பினர் இதற்கிடையில் அவை உண்மையான ரூபாய் நோட்டுகள் தானா அவற்றை சாக்கடையில் போட்டவர்கள் யார் என்பது குறித்து மாவட்ட நிர்வாகத்தினர் விசாரித்து வருகின்றனர்.

மீன் விற்ற காசு நாறாது,  நாய் விற்ற காசு குறையாது என்பதைப் போல பணம் சாக்கடையில் இருந்து வந்தாலும் அதன் மதிப்பு குறைந்து போகாது என்கின்றனர் பீகார் மக்கள். அதனால்தான் சாக்கடையில் பணம் மிதந்து வருவதை கண்டதும் தயங்காமல் பாய்ந்து அள்ளி இருக்கிறார்கள். பணம் பாதாளம் வரை பாயுமோ என்னமோ தெரியாது. ஆனால் சமயங்களில் சாக்கடையிலும் மூழ்கும் என்று தெரிகிறது இந்த சம்பவத்தினால்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com