பிரசவித்த மூன்று மணி நேரத்தில் தேர்வு எழுதச் சென்ற பிகார் பெண்!
பிரசவ வலியால் அவதிப்பட்ட பெண், மனம் கலங்கிவிடாமல் மருத்துவமனையில் சேர்ந்து குழந்தையை பெற்றெடுத்து அடுத்த சில மணி நேரங்களில் ஆம்புலன்ஸில் சென்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினார்.
பிகார் மாநிலம், பங்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ருக்மணி குமாரி. அவருக்கு வயது 22. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவர் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு படித்து வந்தார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு கடந்த புதன்கிழமை (பிப். 15) காலை திடீரென இடுப்புவலி ஏற்பட்டது.
இதையடுத்து நிறைமாத கர்ப்பிணியான ருக்மணி குமாரியை வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சுகப்பிரசவம் ஏற்பட்டது. அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
அவரை ஓய்வெடுக்கச் சொல்லி மருத்துவரும், குடும்பத்தினரும் வலியுறுத்தினர். இந்த முறை தேர்தவு எழுதாவிட்டால் பரவாயில்லை அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என்று அறிவுரை கூறினார். உடன் இருந்த செவிலியர்களும், குடும்பத்தினரும் அதையே வலியுறுத்தினர்.
ஆனால், யார் சொல்லியும் கேட்காமல் பிடிவாதமாக அடுத்த மூன்று மணிநேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்று மாலையில் நடைபெற்ற அறிவியல் தேர்வை எழுதினார்.
ருக்மணியை அந்த ஊரைச் சேர்ந்த பலரும் பாராட்டினர். பெண்கள் கல்விக்கு அரசு முக்கியத்துவம் அளிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் படிப்பில் கவனம் செலுத்தி தேர்வு எழுதியதை மாவட்ட கல்வி அதிகாரி பவன் குமார் பாராட்டினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ருக்மணி, “செவ்வாய்க்கிழமை கணிதவியல் தேர்வை எழுதிவிட்டு வந்தேன். அப்போதிலிருந்தே அசெளகரியமாக இருப்பதுபோல் உணர்ந்தேன். அடுத்த நாள் அறிவியல் தேர்வு இருந்த்து. அதற்காக படித்துக் கொண்டிருந்தேன். இந்நிலையில் இரவு எனக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து காலை 6 மணிக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். எனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. என் மகன் நன்றாக வளர்ந்து படிப்பில் முத்திரை பதிக்கவேண்டும் என்று நினைத்தேன். இந்த நிலையில் மனம் தளர்ந்து நானே அவனுக்கு தவறான உதாரணமாக இருக்கக்கூடாது என்று எண்ணி பிடிவாதமாக தேர்வு எழுதச் சென்றேன். சிரம்மாக இருந்தபோதிலும் தேர்வு எழுதியதில் எனக்கு மகிழ்ச்சிதான். வினாத்தாளும் எளிதாக இருந்தது. அதிக மதிப்பெண் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
அவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் போலோ நாத், “குழந்தை பெற்றுள்ள தாயின் உடல்நலம் முக்கியம். எனவே தேர்வு எழுதச் செல்ல வேண்டாம் என்று ருக்மணியிடம் கூறினேன். ஆனால், தேர்வு எழுதுவதில் அவர் பிடிவாதமாக இருந்தார். இதையடுத்து அவருக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தையும், துணைக்கு உதவியாளர்களையும் அனுப்பிவைத்தோம். தேர்வு எழுதிவிட்டு வந்த அவர் தற்போது நலமாக இருக்கிறார். அவருடைய கல்வி தொடர வாழ்த்துகள்” என்றார்.