பில்கிஸ் பானு சீராய்வு மனு தள்ளுபடி!

 உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து ஆராயும்படி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

குஜராத்தில் கடந்த 2002 -ஆம் ஆண்டு நடந்த கோத்ரா கலவரத்தின்போது கர்ப்பிணியான பில்கிஸ் பானு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அவரின் மூன்று வயது குழந்தை உள்பட 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் இது குறித்து மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. விசாரண நடத்தியது. இதில் குற்றவாளிகள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உத்தரவிடப்பட்டது.

இதனிடையே இந்த வழக்கில் தண்டனை பெற்ற ஒருவர், தம்மை சிறைத்தண்டனை முடியும் முன்பே விடுவிக்க குஜராத் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தண்டனையை குறைப்பது குறித்து குஜராத் அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியதுடன் இதுதொடர்பாக இரண்டு மாதங்களுக்குள் முடிவெடுக்க உத்தரவிட்டது.

ஏற்கெனவே 14 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டதாலும் நன்னடத்தை காரணமாகவும் 11 பேரையும் விடுதலை செய்வதாகவும் இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து விட்டதாகவும் குஜராத் அரசு தெரிவித்து அதன்படி, அவர்கள் அனைவரும் ஆகஸ்ட் மாதம் சுதந்திரதினத்தையொட்டி விடுதலை செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பில்கிஸ் பானு தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே இந்த வழக்கை விசாரித்து வரும் அமர்விலிருந்து விலகிக் கொள்வதாக உச்சநீதிமன்ற நீதிபதி பீலா திரிவேதி தெரிவித்திருந்தார்.

சீராய்வு மனுக்களை ஏற்கெனவே தீர்ப்பளித்த நீதிபதிகள்தான் ஆய்வு செய்வர். இதன்படி நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, விக்ரம் நாத் ஆகியோர் இந்த மனுவை கடந்த 2022, டிசம்பர் 13 ஆம் தேதி ஆய்வு செய்தனர். பின்னர் மனுவை தள்ளுபடி செய்வதாக பில்கிஸ் பானுவின் வழக்குரைஞருக்கு 16 ஆம் தேதி தகவல் தெரிவித்தனர்.

சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று பில்கிஸ் பானுவின் வழக்குரைஞர் ஷோபா குப்தா தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com