கர்நாடகத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகன் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்!

கர்நாடகத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகன் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்!

கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மடல் விருபாக்க்ஷப்பா. தாவண்கரே மாவட்டம், சென்னகிரி தொகுதியிலிருந்து இவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசுத்துறை நிறுவனமான கர்நாடக சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகவும் இவர் இருக்கிறார்.

இவரது மகன் பிரசாந்த் மடல் பெங்களூர் பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தில் தலைமை கணக்காளராக பணிபுரிகிறார்.

2008 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான பிரசாந்த் மடல், சோப்பு மற்றும் டிடெர்ஜென் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை சப்ளை செய்யும் ஒருவரிடம் பேரம் பேசி ரூ.81 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக துப்பு கிடைத்ததன் பேரில் ஊழல் தடுப்பு அமைப்பான லோக் ஆயுக்தா அதிகாரிகள் அவரை கண்காணித்தனர்.

கடந்த வியாழக்கிழமை அலுவலகத்தில் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது லோக் ஆயுக்தா அமைப்பினர் இவரை கையும் களவுமாக பிடித்தனர். உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார். அவரது அலுவகத்தில் இருந்த ரூ.1.75 கோடி பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து போலீஸார் பிரசாந்த் மடல் வீட்டில் நள்ளிரவு வரை சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் கட்டு கட்டாக பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இவற்றின் மதிப்பு ரூ.6 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

கர்நாடகத்தில் இன்னும இரண்டு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள பா.ஜ.க. ஆட்சியை தக்கவைக்க போராடி வருகிறது. கர்நாடகத்தில் தற்போது முதல்வர் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்றாலும் அவருக்கு போதிய செல்வாக்கு இல்லை.

பா.ஜ.க.விடமிருந்து ஆட்சியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று காங்கிரஸ் முனைப்புக் காட்டி வருகிறது.

பொம்மை அரசு 40 சதவீத கமிஷன் பெறும் அரசு என்ற குற்றச்சாட்டு ஏற்கெனவே உள்ளது. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் செல்வாக்கை பயன்படுத்தி தேர்தலை வெல்ல பா.ஜ.க. தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் எம்.எல்.ஏ. மகன் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பிடிபட்டுள்ளது பெரும் பரபரப்பையும் கட்சிக்கு தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியுள்து.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் லோக் ஆயுக்தா கலைக்கப்பட்டது. அப்போது சிலர் மீது போடப்பட்ட லஞ்ச வழக்குகளும் கைவிடப்பட்டன. மீண்டும் லோக்ஆயுக்தா அமைப்பை கொண்டு வந்தது நாங்கள்தான். எனவே முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கைவிடப்பட்ட லஞ்ச வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே பா.ஜ.க. எம்.எல்.ஏ. அரசு நிறுவனத் தலைவர். லஞ்சப்பணம் செல்வதோ மகன் கையில். இதுதான் பா.ஜ.க.வின் ஊழல் பாதை என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com